நானாவதி ஆணையம்முன் காவல்துறை இயக்குநர் (ஓய்வு) அளித்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை
குஜராத் மாநில காவல்துறை முன்னாள் இயக்குநர் சிறீகுமார் 2002 ஆகஸ்ட் 24 அன்று நானாவதி ஆணையம் முன் அளித்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:
பஜ்ரங்தளம், விசுவ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகளைச் சார்ந்த தீவிர மதவெறியாளர்களின் கருணையிலேயே தாங்கள் முழுமையாக விடப்பட்டு விட்டதாக மக்களின் ஒரு பகுதியினர் கருதுவதாகவே முஸ்லிம் சமூகத்திடமிருந்து கிடைத்த பெரும் பான்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன. 27-02-2002 முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலவரங்களில் பெரும் எண்ணிக்கை கொண்ட முஸ்லிம் சமூக மக்கள் கொல்லப்பட்டது, பெரும் மதிப்பு கொண்ட சொத்துகளை அவர்கள் இழந்தது ஆகியவை பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக ஒரு பழிவாங்கும் உணர்வை அவர்களிடையே உருவாக்கியுள்ளது. 2003 ஏப்ரல் 23 அன்றைய நிலையில், கலவரங்களில் 636 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். (இவர்களில் 91 பேர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்.) இறந்த இந்துக்களின் எண்ணிக்கை 181 (காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் 76 பேர்). 329 முஸ்லிம்களும் 74 இந்துக்களும் படுகாயமடைந்துள்ளனர். முஸ்லிம் மக்கள் இழந்த சொத்துகளின் உத்தேச மதிப்பு ரூ 600 கோடி; இந்துக்களின் சொத்துகளின் இழப்பு ரூ 40 கோடி.
தங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றி தாங்கள் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறையினர் பாகுபாட்டுடன் நடந்து கொண்டதால், கலவரங்கள் நடந்த காலம் முதல் முஸ்லிம் சமூக மக்கள் குற்றவியல் நீதித் துறையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கத் தொடங்கியுள்ளனர். மாநில அரசின் மீது, குறிப்பாகக் காவல் துறை மீது தாங்கள் நம்பிக்கை இழந்ததற்குக் கீழ்க்கண்ட காரணங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறுபான்மை மத மக்கள் அளிக்கும் புகார்களைக் காவல் துறை அதிகாரிகள் நியாயமான முறையில் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரிப்பதில்லை. பெரும்பாலான நேரங்களில் புகார் கொடுக்க வருபவர்களிடம் புகார் அளிக்காமல் இருக்கும்படியே அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். அல்லது குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்துக் குறிப்பிடும்படியோ அல்லது குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைக் குற்றம் செய்தவர்களாகக் குறிப்பிடவேண்டாம் என்றோ அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மாறாக குற்றம் இழைத்தவர்கள் சார்பாக பாதிக்கப்பட்டவர்கள் மீது புகார்களைக் காவல் துறையினரே பதிவு செய்து, குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
பல்வேறு இடங்களில் நடந்தேறிய பல குற்றங்களையும் இணைத்து ஒரே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையை இழந்து விடுவதுடன், சாட்சியங்களையும் பெரும் அளவில் பாதிக்கிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்ளத் தேவையான சட்ட ஓட்டைகள் உருவாக்கப் படுகின்றன. அரசு வழக்கறிஞர்களின் பாரபட்ச நிலையாலும், காவல்துறையினர் உறுதியாக இல்லாததாலும், ஜாமீன் தர இயலாத குற்றம் சாட்டப்பட்ட இந்துக்களும் கூட உடனே விடுவிக்கப்பட்டுவிடுகின்றனர். புகழ் பெற்ற உள்ளூர் தலைவர் எவராவது இவ்வாறு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரும்போது அவருக்கு கதாநாயகருக்கு அளிப்பதைப் போன்ற வரவேற்பு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வி.இ.ப. மற்றும் பஜ்ரங் தளத் தலைவர்கள் இரு சமூக (இந்து, முஸ்லிம்) வணிக மக்களிடமிருந்தும் பாதுகாப்புப் பணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரியவருகிறது. முஸ்லிம் மக்களை எந்த வேலையிலும் வைத்துக் கொள்ளக்கூடாது, எந்த தொழிலும் தரக் கூடாது என்று வியாபாரிகளையும் பொதுமக்களையும் பஜ்ரங் தளத் தொண்டர்கள் மிரட்டி வருகின்றனர். இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதியில் எந்த ஒரு வேலையையாவது செய்ய முஸ்லிம் மக்கள் செல்லும் போது, வி.இ.ப. மற்றும் பஜ்ரங்தளத் தொண்டர்கள் அவர்களை மிரட்டி விரட்டி விடுகின்றனர். இதனால் ஏற்படும் வெறுப்பு, சோர்வு, பொருளாதார இழப்பு, வேலையின்மை ஆகிய அனைத்தும் சேர்ந்து அவர்களை முஸ்லிம்களின் முகாமுக்குத் தள்ளிச் சென்று விடுகின்றன. முஸ்லிம்கள் விட்டுச்சென்ற வியாபாரம், தொழில்களின் வெற்றிடத்தில் தங்களையோ தங்களுக்கு வேண்டியவர்களையோ நிலைநிறுத்திக் கொள்ள வி.இ.ப., பஜ்ரங்தளத் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
தேவையான பரிகார நடவடிக்கைகள்:
கலவரங்களின் போது அவற்றைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அல்லது கலகக்காரர்களுக்குத் துணைபோன ஒரு நிலைவரை உள்ள காவல்துறை அதிகாரிகளை நிருவாகப் பணிகளில் இருந்து மாற்றி வேறு புதியவர்களை நியமித்தல்.
இவ்வாறு கலகக்காரர்களுக்குத் துணை போன அல்லது கலகத்தைத் தடுக்காத அல்லது கலகத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டப்படியான தண்டனைகளை அளித்தல்.
தாங்கள் அளித்த புகார்களையும், முதல் தகவல் அறிக்கைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெயர்களை புகாரிலிருந்து நீக்கவேண்டும் என்றும், முஸ்லிம் மக்களை வி.இ.ப. பஜ்ரங் தள, துர்கா வாகினி போன்ற தீவிர இந்துமத அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. இதற்கு மாற்றாக முன்னர் அவர்கள் வசித்து வந்த இருப்பிடங்களுக்குத் திரும்பச் செல்ல அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இத்தகையச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நன்றி: "டெகல்கா" - 12-3-2005
தமிழில்: விடுதலை.காம்
http://www.viduthalai.com/20050318/kattu.html
Sunday, March 20, 2005
Subscribe to:
Posts (Atom)