"இந்த எல்லையைத் தாண்டி இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது" என்று இந்துக் கோயில்கள் சிலவற்றில் கட்டுப்பாடுகள் இருப்பது நாடறிந்த செய்தி. இந்தக் கட்டுப்பாடு இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
இந்துவாக மாறி, இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்த அமெரிக்கப் பெண்ணும் அவளின் கணவனும் ஒரிஸாவின் லிங்கராஜ் கோயிலில் நுழைய முயன்றபோது அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னை பெரிதாகி ஜனாதிபதி வரை புகார் போயிருக்கிறது.
வட இந்தியாவின் புண்ணிய தலங்களைக் காண கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவிலிருந்து வந்தவர் பமீலா கே ஃபிளிக். 28 வயது இளம் பெண்ணான இவர் வாரணாசியில் தங்கியிருந்தபோது அந்த ஊரைச் சேர்ந்த அனில் யாதவ் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயருடன் காதல் பற்றிக் கொண்டது. இந்துவாக மதம் மாறிய பமீலா, ஏப்ரல் மாதத்தில் இந்து முறைப்படியே அனிலை மணம் புரிந்து கொண்டார்.
தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த பமீலா, கடந்த மாதம் ஒரிஸா மாநிலத்திலிருக்கும் கோயில்களைக் காண கணவனோடு போயிருக்கிறார். 30 ஆம் தேதியன்று ஒரிஸாவின் தலைநகர் புவனேஸ் வரிலுள்ள புகழ்பெற்ற லிங்கராஜ் கோயிலில் நுழைய முயன்றபோது, பமீலாவும் அனில் யாதவும் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
"நீ வேற்று மதத்தைச் சேர்ந்த பெண். இந்து மத கோட்பாடுகளின்படி உன்னை அனுமதிக்க முடியாது. அந்நிய மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்ததால் உன்னையும் அனுமதிக்க முடியாது" என்று திருப்பிவிட்டுள்ளனர் கோயில் ஊழியர்கள் . இதையடுத்து, பமீலா இந்துவாக மதம் மாறியதற்கான சன்றிதழ்களுடன் மறுநாள் கோயிலுக்கு வந்திருக் கிறது அந்த காதல் தம்பதி. அப்போதும் தோல்விதான்.
இதைப்பொறுத்துக் கொள்ளமுடியாத அனில் யாதவ், வாக்குவாதத்தில் இறங்க, பிரச்னை முற்றி அடிதடியாகியிருக்கிறது. இதில் அனில் தாக்கப்பட, கோயில் ஊழியர்கள் தன்னையும் தன் கணவனையும் கண் மூடித்தனமாகத் தாக்கிவிட்டனர் என்று போலீஸுக்குப் போனார் பமீலா. ஆனால், புகாரை வாங்க மறுத்து துரத்திவிட்டது போலீஸ். மறுநாள் இந்தப் பிரச்னை பரபரப்பான செய்தியாக மீடியாக்களில் இடம்பிடிக்க, பதறிப்போன போலீஸார் அதன்பிறகு புகாரைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் மேற்கொண்டு பெரிதாக எந்த நடவடிக்கையும் இல்லை. அதே போல அந்த தம்பதியால் கோயி லுக்குள்ளும் கடைசி வரை நுழைய முடியவில்லை.
பொங்கி தீர்க்க ஆரம்பித் திருக்கும் பமீலா, "நான் மதம் மாறியதற்காக இப்போது வெட்கப் படுகிறேன். இந்து மதத்துக்கு மாறிய பிறகும் எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததோடு அதை நியாப்படுத்திப் பேசுகிறார்கள் கோயிலின் நிர்வாகிகள். என் கணவரை திட்டமிட்டு வம்புக்கு இழுத்து தகராறு செய்தனர். முகத்தில் ஒரு குத்துவிட்டு விரட்டி விட்டனர். இந்தப் பிரச்னையை நான் இத்துடன் விடப் போவதில்லை. மதம் மாறிய சான்றிதழ் மற்றும் போட்டோக்களுடன் ஒரிஸா முதல்வருக்கும், ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இமெயில் மூலம் புகார் அனுப்பியிருக்கிறேன்" என ஆவேசத்துடன் பேசுகிறார்.
11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கராஜ் கோயில், பூரி நகரிலிருக்கும் ஜெகந்நாத் கோயிலுக்கு அடுத்த படியாக ஒரிஸாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் நிர்வாகிகளில் ஒருவரான ராம்காந்த் மிஸ்ராவிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டால், "நெற்றியில் திலகமிட்டுக் கொண்டால் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா?" என ஆவேசப்பட்டவர், கோயிலின் வாசலில் எழுதி மாட்டப்பட்டுள்ள "இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை" என்ற போர்டைக் காட்டினார்.
கோயிலின் டிரஸ்டிகளில் ஒருவரான சரேஜ் மிஸ்ரா, "ஒரிஸாவில் முக்தி மண்டபம் என ஒரு அமைப்பு உள்ளது. பூரி சங்கராச் சாரியாரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு, இது போன்ற விவாகாரங்களை விசாரித்து முடிவெடுக்கிறது. இதில் இந்து மத குருமார்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மதம் மாறியவர் பற்றி நன்கு விசாரித்து இந்த அமைப்பு ஒரு சான்றிதழ் தரும். இதை வைத்து கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்து விடும். பிரச்னைக்குரிய தம்பதி இந்த அமைப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
ஒரிஸா மாநில கோயில்களைப் பொறுத்த வரை இது போன்ற விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பூரி சங்கராச்சாரியான சுவாமி நிஷ்ச்சாலனந்த் சரஸ்வதிக்குதான் உண்டு. அவரிடம் நிருபர்கள் இந்த விஷயம் பற்றிக் கேட்டபோது, "வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. ஆனால், கோயில் வழிபாடுகளில் இவருக்கான உரிமைகள் மாறுபடுகிறது. இந்து சனாதன தர்மத்தின்படி கோயில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது சாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன. வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது.
யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாற லாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என் பதை அவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும் வரைமுறை களும் உள்ளன. இந்து கடவுள்கள் மீது உண்மையான பக்தியும் நம்பிக்கை யும் ஒருவன் கொண்டிருப்பானே யானால், தன் மீது விதிக்கப்படும் இந்த விதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும்" என விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒரிஸாவில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய இந்துக்களை மீண்டும் பழைய மதத்துக்கு மாற்றும் முயற்சியை விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் செய்து வருகின்றன. இந்நிலையில் லிங்கராஜ் கோயில் சம்பவம், பழையபடி இந்து மதத்துக்கு திரும்புபவர்களை யோசிக்க வைத்துள்ளது. இதையடுத்து இந்த அமைப்பினரையும் இந்த விஷயம் வருத்தமடைய வைத்துள்ளது.
வி.ஹெச்.பி - யின் தலைமை நிலையச் செயலாளர் சரத்சர்மா இது பற்றி பேசும்போது, ஒருவர் இந்து மதத்துக்கு மாறிய பிறகு அவரை கோயிலுக்குள் விட முடியாது எனக் கூறுவது மிகவும் தவறான கருத்தாகும். இவர்களுக்கு என தனி சட்டம் எந்த வேத நூல்களிலும் எழுதப்படவில்லை. இப்படிப் பட்ட விதிமுறைகளை இவர்கள் எங்கு இருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்லை.
அதே சமயம் வெளிநாட்டவர்கள் சிலர் இங்கு வரும்போது வேறு நோக்கத்துடன் மதம் மாறி, பிறகு தங்கள் நாட்டுக்கு திரும்பிய பிறகு பழையபடி வாழத் துவங்கி விடுகிறார்கள். இதில் பமீலா எந்த வகையில் சேர்வார் என்று தெரியவில்லை என்று சொன்னவர்,
"எது எப்படியோ, ஆனால் பழையபடி இந்து மதத்துக்கு திரும்புபவர்கள் இந்தப் பிரச்னை காரணமாக பயந்து பின்வாங்க மாட்டார்கள்" என்று முடித்தார்.
இதே போன்றதொரு விவகாரம் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது வெடித்தது. அதில் சிக்கியவர் இந்திராதான். பூரி ஜெகந்நாத் கோயிலுக்கு அவர் வந்தபோது, "பார்சி இனத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தியை மணமுடித்த காரணத்தால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது" என்று கோயிலில் இருந்தவர்கள் கடுமையாக எதிர்ப்புக் காட்ட, வேறு வழியின்றி இந்திரா திரும்பிச் செல்ல வேண்டியதாகி விட்டது. ஆனால், இதையட்டி பெரிய சர்ச்சை அப்போது உருவானது.
பமீலா சம்பவத்தின் மூலம் இந்திரா காந்தி விவகாரம் பலருடைய நினைவிலும் நிழலாட ஆரம்பித்துள்ளது. மத்தியிலிருப்பது காங்கிரஸ் அரசு என்பதால் இந்த விஷயத்தில் அவர்கள் என்ன மாதிரியான முடிவை எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
நன்றி:- ஆனந்த விகடன் நவம்பர் 23, 2005
Saturday, November 26, 2005
Subscribe to:
Posts (Atom)