Monday, May 22, 2006

பூசாரி ஆக முடியாததால் சிலைகள் உடைப்பு

பூசாரி ஆக முடியாததால் 21 சிலைகளை உடைத்த வாலிபர்

மதுரை அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகம் பாறைப்பத்தி எலியார்பத்தி, பெரியகூடக்கோவில், நெடுமதுரை ஆகிய கிராமங்கள் அருகே உள்ள 21 சாமி சிலைகளையும், 3 பீடங்களை யாரோ உடைத்து விட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், இன்ஸ்பெக்டர் பாதமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஏட்டுகள் நாகராஜன், ராமு, வீரபாண்டி ஆகியோர் விசாரணை செய்தனர். விசாரணையில் பாறைபத்தியை சேர்ந்த கருப்பசாமி என்ற வைரன் மகன் கிருஷ்ணன் (வயது 27) சாமி சிலைகளை உடைத்தது தெரிய வந்தது.

போலீசார் கிருஷ்ணனை தேடி செங்குன்றாபுரம், நிலக்கோட்டை பகுதிக்கு சென்றனர். போலீசை கண்டதும் தப்பி ஓடிவிட்டான். காரியாபட்டி அருகே உள்ள மந்திரிஓடை பக்கம் கிருஷ்ணன் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தகவல் கொடுத்த நபர் கூறிய அடையாளத்தை வைத்து மந்திரிஓடைக்கு சென்றனர். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கிருஷ்ணனை தப்பி ஓடாதபடி சுற்றி வளைத்து பிடித்தனர்.
போலீசில் பிடிபட்ட கிருஷ்ணன் சிலைகளை தனியாக சென்று உடைத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது அப்பா கருப்பசாமி, கருப்பு கோவில் பூசாரி. அவர் இறந்துவிட்டார். பூசாரி அவதற்கு அருள் இறக்கினார்கள். அருள் வரவில்லை. இதனால் பூசாரி ஆகமுடியவில்லை. திருமணம் நடைபெறவில்லை. நான் பலமுறை சாமி கும்பிட்டும் சாமி அருள் இறங்கிவரவில்லை. இதனால் சாமி உதவி செய்யவில்லை. எதுக்கு கல் சிலையா இருக்கு என்று உடைத்தேன். இரவில் தான் சிலைகளை உடைத்தேன். எனக்குத்தான் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறி உள்ளார்.

சிலைகளை உடைக்கும் முன் அடிக்கடி சாமி சிலைகள் மீது மண்ணை எறிவது, கல்லால் அடித்தும் வந்து இருக்கிறார். ஊர் மக்கள் கண்டித்து உள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

http://hosuronline.com/update/news/tamilnews/read.asp?newsID=1422

No comments: