Friday, July 07, 2006

பெண்கள் சாமியைத் தொட்டால் தோசம்

‘‘சபரிமலை ஐயப்பன் சன்னதியில் அநியாயம் நடக்கிறது’’ என்று, கடந்த 29.06.06 இதழில் நமக்குப் பேட்டியளித்திருந்தார் உன்னிகிருஷ்ண பணிக்கர். ஐயப்பன் கோயிலில் நடந்த சில அபசகுன நிகழ்வுகளைத் தொடர்ந்து, தான் நடத்திய தேவப்பிரசன்னத்தில் கண்டறிந்த பல விஷயங்களில், ஐயப்பனை வயதுப் பெண்கள் சிலர் தரிசித்தது பற்றியும் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் பணிக்கர்.

அதன் பிறகு, இந்த விஷயங்கள் மாநிலம் தாண்டி பல பத்திரிகைகளிலும் விரிவாக வெளியானபோதுதான், ‘அப்படி ஐயப்பனைத் தரிசித்தது நான்தான்... ஐயப்பன் சிலையை நான் தொடவும் நேர்ந்தது’ என்று சொல்லி, தற்போது பூதாகரமாகியுள்ள பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டார் கன்னட நடிகையும், தயாரிப்பாளருமான ஜெயமாலா.

‘1987_ல் எனக்கு 27 வயது. அப்போது நானும் எனது (முன்னாள்) கணவரும் ஐயப்பனைத் தரிசிக்க சபரிமலை போயிருந்தோம். எங்களை அடையாளம் கண்ட கோவில் நிர்வாகிகள் சிலர், வி.ஐ.பி. வாசல் வழியாக ஐயப்பன் சன்னிதானத்திற்குள் எங்களை அழைத்துச் சென்றார்கள். அப்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் நான் சாமி சிலை அருகே விழுந்தேன். அந்த நேரத்தில்தான் சிலையை நான் தொட நேர்ந்தது. இத்தனை ஆண்டுகளாக அதை நான் தவறு என்று நினைக்கவில்லை. சாமி கோபத்தில் இருக்கிறார் என்று தகவல் வெளியானதால் நடந்ததை விவரித்து தேவசம் போர்டுக்குக் கடிதம் எழுதினேன்’ என்று ஜெயமாலா தினசரி சொல்லி வந்தார்.

‘நம்பினார் கெடுவதில்லை’ பட ஷ¨ட்டிங்கின்போது சபரிமலைக்குப் பெண்கள் போகக் கூடாத பகுதியில் நின்று நடனம் ஆடினேன்’ என்று நடிகை சுதாசந்திரனும் சொல்ல, பரபரப்பு கூடியது. கேரளாவிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்புக்குரல்! ‘ஐயப்பன் சிலையைத் தொட்டிருக்கவே முடியாது. இதில் ஏதோ சதி இருக்கிறது...’என்று அம்மாநில அமைச்சர் தொடங்கி, ஜோதிடர்கள் வரை கொதித்தெழுந்தார்கள்.

ஜெயமாலா அப்படி ஒரு கடிதத்தை தேவசம் போர்டுக்கு எழுதினாரா இல்லையா என்பதிலேயே தேவசம் போர்டுக்குள் இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. தந்திரி, மேல்சாந்தி, தேவசம் போர்டு நிர்வாகிகள் என எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகை ஜெயமாலாவிடம் பேசினோம். தன் மீது ஏவப்படும் எதிர் விமர்சனங்களில் கலங்கிப் போனவராக நொந்தபடியே பேசினார் ஜெயமாலா. ‘‘நடந்த உண்மையை மனசாட்சி உறுத்தியதால் கடிதமாக எழுதி அனுப்பி வைத்தேன். இடைப்பட்ட காலத்தில் என் வீட்டில் நடந்த அஸ்தமங்கல பூஜையின்போது, எனக்கு சாமி சிலையைத் தொட்ட தோஷம் இருப்பதாக ஒரு சாமியார் சொன்னார். அதனால்தான் நான் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதினேன். இப்போது விளம்பரத்திற்காக நான் இதைச் சொல்வதாக விமர்சிக்கிறார்கள். சதி செய்வதாகவும் சொல்லி என்னைக் காயப்படுத்துகிறார்கள். நான் விளம்பரம் தேடுபவளாக இருந்தால், ‘எனது கடித விஷயத்தை ரகசியமாக வைத்திருங்கள். கடிதத்தைப் பின்பு அழித்து விடுங்கள்’ என்று தேவசம் போர்டுக்குச் சொல்லி இருப்பேனா? எனது கடித விவகாரத்தை வெளியில் சொல்லி பிரச்னையை ஏற்படுத்தியது அவர்கள்தான். போதும் போதும்... சாமி விவகாரத்தில் இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. விசாரணையோ, சட்ட நடவடிக்கையோ... எதையும் நான் எதிர்கொள்வேன். ஐயப்பன் எனக்குத் துணையிருப்பார்’’, என்று சொல்லி முடித்துக் கொண்டார் ஜெயமாலா.

சர்ச்சை அதோடு ஓயவில்லை.. ‘Êஜெயமாலாவைக் கைது செய்யவேண்டும். அவரைத் தூண்டிவிட்ட பணிக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற குரல்கள் இன்னும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பணிக்கர் பார்த்த தேவபிரசன்னத்தையே ரத்து செய்து விட்டு வேறு பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் சில கேரள ஜோதிடர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உன்னிகிருஷ்ண பணிக்கரிடமே அவர் மீதான விமர்சனங்களைச் சொல்லி விளக்கம் கேட்டோம். ‘‘நான் உங்களுக்கு அளித்த பேட்டியின் போதே சொன்னேன். இந்த தேவ பிரசன்னம் நிகழ்ச்சியை நடத்த நான் ஆர்வம் காட்டவில்லை. நானாக முன் செல்லவும் இல்லை. தேவசம் போர்டு தலைவர் மற்றும் அதிகாரிகள்தான் என்னிடம் வேண்டிக்கொண்டார்கள். அதன்படியே பிரசன்ன நிகழ்ச்சி நடந்தது.

அதில் ஒரு விஷயமாக ‘அனுமதிக்கப்படாத வயதுடைய (11_49) சில பெண்கள் ஐயப்பனைத் தரிசித்திருக்கிறார்கள். இதில் சாமி கோபத்தில் இருக்கிறார்’ என்றுதான் சொன்னேன். நடிகை என்றோ வி.ஐ.பி. என்றோ நான் யாரையும் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை.

இந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு, யாரோ ஒரு நடிகை தானாகவே முன் வந்து, தான் தரிசித்ததைச் சொன்னால், அதை எதிர்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது தேவசம் போர்டுதான். இதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது? சதி செய்ய என்ன அவசியம் இருக்கிறது?

சரிந்துபோன என் புகழைச் சரி செய்யத்தான் நான் தேவ பிரசன்னம் நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டேன் என்பதை மறுக்கிறேன். தேவ பிரசன்னத்தின் புனிதத்தன்மை புரியாதவர்கள் இப்படிப் பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்கள் அழைப்பின் பேரில் சென்று பிரசன்னம் பார்த்து, அதன் மூலம் எனக்குத் தெரிந்த குறைகளைச் சுட்டிக் காட்டியதுடன் என் பணி முடிந்தது.இதை ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் இஷ்டம்.

பிரசன்னத்தில் வந்த குறைபாடுகளில் இங்கு வரும் பக்தர்களுக்குச் சரியான உணவு இன்றி அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் ஒன்று. இதையடுத்து நான் என் தொடர்பு மூலமாக ஒரு டிரஸ்ட்டின் உதவியை நாடி விசேஷ நாட்களில் எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவ்வளவு பேருக்கும் இலவச உணவு அளிக்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கிறேன். என் மீது விமர்சனம் செய்பவர்கள் ஒரு பத்துப் பேருக்காவது உணவு போடுவார்களா? மாட்டார்கள். என் மீது இப்படி விமர்சனங்கள் வர காரணமாக உள்ள ஒரு டி.வி.சேனலும் அவர்களின் பத்திரிகையும் நான்கு பேருக்காவது உணவளிப்பார்களா? ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்!’’ என்று ஆவேசப்பட்ட பணிக்கர், ‘‘ஆக நான் எனது கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன். வீணான இந்தச் சர்ச்சைகளால் ஐயப்பனின் புனிதத்தன்மை எந்த வகையிலும் கெடவில்லை என்பதுதான் ஆறுதலான விஷயம்’’, என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார்.

இந்தச் சர்ச்சைகளில் இருந்து ஒதுங்காமல் கேரள அரசு இதில் தலையிட வேண்டும் என்று வந்த வேண்டுகோள்களை ஏற்க மறுத்துள்ள அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன், ‘‘ஐயப்பன் கோயில் மூலமாக கேரளாவுக்கு வரும் கணிசமான வருமானத்தைக் கெடுக்க சில மாநில அரசுகள் செய்த சதி’’‘ என்று சொல்லி, பிரச்னையை அடுத்த பரிமாணத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

அரசியல்வாதிகள் சும்மாயிருப்பார்களா..? ‘இந்துமத உணர்வுகளைப் புண்படுத்த அந்நிய நாடுகள் செய்த சதியாக இருக்கலாம். அதற்கு இங்குள்ள சிலர் உதவியிருக்கலாம். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும்’ என்று ஒரு புது குண்டை வீசியிருக்கிறது பி.ஜே.பி.

கேரள அரசு இப்பிரச்னையில் தலையிட மறுத்துள்ள நிலையில், அடுத்து என்ன செய்வது என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு தேவசம் போர்டுக்கு வந்துள்ளது. சர்ச்சையின் ஆணிவேரான, சிலையைத் தொட்ட விவகாரம் குறித்து ஜெயமாலாவிடம் விசாரிக்க தேவசம் போர்டின் விஜிலன்ஸ் அதிகாரியான அசோக் குமாரை பெங்களூருக்கு அனுப்பியிருக்கிறது தேவசம் போர்டு. ‘‘அவரது அறிக்கையைப் பெற்று ஜூலை 7_ம் தேதி கூடவுள்ள போர்டு கூட்டத்தில் வைத்து விவாதித்து இறுதி முடிவு எடுப்போம். அதற்கிடையில் பழைய விஷயங்களைப் பேசி சர்ச்சையைத் தொடர விரும்பவில்லை’’ என்று நம்மிடம் சொன்னார் தேவசம் போர்டின் தலைவர் ராமன் நாயர்.

பிரம்மச்சாரி கடவுளான ஐயப்பன் விஷயத்தில் பெண்களை மையப்படுத்தி எழுந்துள்ள இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒட்டுமொத்த நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு சூழ்நிலையைச் சாந்தப்படுத்த வேண்டும் என்கிறார்கள், ஐயப்ப பக்தர்கள்!

எஸ்.பி.எல்.

நன்றி:
குமுதம் ரிப்போர்ட்டர் 9.7.2006

No comments: