Saturday, December 11, 2004

நேஷ குமார் - சொல்ல மறந்த கதை

தொடர்: 1

ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்
நன்றி: விடுதலை இராசேந்திரன்

சாதித்துவ நெருப்பில் நந்தனை எரித்த வரலாற்றுத் தொடர்ச்சியாய் - ஒரிசாவில் 'இந்துத்துவ' நெருப்புக்கு இறையாக்கப்பட்ட ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது அன்பு மகன்கள் பிலிப்ஸ் (வயது 9), திமோத்தி (வயது 7) நினைவுக்கு...

1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி! தமிழ்நாட்டில் - அன்றைய தினம், ஒரு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி - இந்தியா முழுவதையுமே குலுக்க ஆரம்பித்தது!

திருநெல்வேலி மாவட்டத்திலே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த சுமார் 1000 தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள், தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த சாதிக் கொடுமைகளால், இந்து மதத்துக்கே முழுக்குப் போட்டுவிட்டு அந்தத் தேதியில்தான் இஸ்லாம் மதத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த காலக்கட்டத்தில் - தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் துவக்கிடும் முயற்சிகளில் நாடுமுழுவதும் தீவிரம் காட்டி செயல்பட்டனர் என்றாலும் அவர்கள் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை.

அதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த அவர்களுக்கு - இந்த மதமாற்றம் ஒரு வாய்ப்பாகப் பயன்பட்டது. டில்லியிலிருந்து - பல ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்தக் கிராமத்திலே முகாமடிக்க ஆரம்பித்தனர். மத மாற்றம் ஒரு "தேசிய அதிர்ச்சியாக" பிரபலப்படுத்தப்பட்டது.

அவசர நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே அவசரநிலை காலத்தில் தமிழ் நாட்டில் பார்ப்பன ஆலோசகர் ஆட்சி நடந்தபோது ஆர்.எஸ்.எஸ். தத்துவம்தான் இங்கே ஆட்சி புரிந்தது.

கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதுமான இந்த தந்திரக்காரர்கள், தங்கள் அமைப்புக்கு பெரும் தலைவர்களின் ஆதரவெல்லாம் இருப்பதாக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கி- அதன் மூலம் அப்பாவிகளை மயக்கப் பார்ப்பது இவர்களின் நடைமுறைத் தந்திரம்!

இந்தக் கூட்டத்தின் வரலாற்றுக் கலாச்சாரமே இப்படித்தான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்.

இதோ ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறோம். மத்தியில் ஆட்சிக்கட்டிலுக்கு வந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதற்குக் காரணமாயிருந்தது இரட்டை உறுப்பினர் (Duel Membership) பிரச்சனை! அதாவது ஜனதா கட்சியிலே அங்கம் வகிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஆகலாமா? என்ற பிரச்னை. இது அப்போது மட்டும் ஏற்பட்டது அல்ல. 1934ம் ஆண்டிலேயே அந்தப் பிரச்னை, காங்கிரஸ் கட்சியிலே ஏற்பட்டிருக்கிறது!

1934ம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றியது. என்ன அந்தத் தீர்மானம்?

"காங்கிரஸ் கட்சியிலே உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருக்கக் கூடாது"

இந்தத் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் காங்கிரஸ் ஊடுருவலைத், தடுத்து நிறுத்தியது! உடனே காந்தியாருக்கு வலை வீசும் தந்திரங்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மேற்கொண்டார்கள்.

அதே ஆண்டு - 'வார்தா'விலே ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது! அதைப் பார்வையிட வரவேண்டும் என்று காந்தியாரை அழைத்தார்கள். ஹெட்கேவர் காந்தியாரை நேரில் போய் சந்தித்துப் பேசினார். காந்தியாரும் முகாமைப் பார்வையிட்டார்!

உடனே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்கள் பிரச்சார சாதனங்கள் மூலம் திட்டமிட்ட ஒரு கருத்தைப் பரப்பினர்.

"ஆர்.எஸ்.எஸ்.சேவைகளை காந்தி அடிகள் நேரில் பார்த்து பாராட்டினார்" என்பதே அந்தப் பிரச்சாரம்!

ஆனால் - இது உண்மைக் கலப்பில்லாத பொய்ப் பிரச்சாரம்! காந்தியார் பாராட்டு எதுவுமே தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அது மட்டுமல்ல, காங்கிரஸ்காரர்கள் - ஆர்.எஸ்.எஸ்.சில் சேரத்தடை விதித்து காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் அப்படியே இருக்கட்டும் என்றார் காந்தியார்.

காந்தியாரோடு வார்தா பயிற்சி முகாமுக்கு உடன் சென்ற சீடர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளைச் செய்கிறார்கள் என்று காந்தியாரிடம் சொன்னபோது - காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமா?

"ஹிட்லரின் நாசிப்படையும் முசோலினியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்து விட வேண்டாம்."

இப்படி ஹிட்லர், முசோலினியில் நாசிச, பாசிசப் படைகளோடு - ஆர்.எஸ்.எஸ்-ஸை ஒப்பிட்டுக் கருத்துக் கூறிய காந்தியரை தங்களின் ஆதரவாளர் போல் சித்தரித்துக் காட்டிய பொய்யர்களின் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.

(தொடருவேன்.....)

நன்றி: 'விடுதலை' க. இராசேந்திரனின் ஆர்.எஸ்.எஸ். - ஓர் அபாயம் (வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை)


No comments: