Saturday, December 25, 2004

பாசிச இயக்கம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்

தொடர்...3

இவர்களின் 'அம்பேத்கர் ஆதரவு நாடகத்தை' நாடு முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காக - அனுமதிக்கப்படாத வீதிகளில் ஊர்வலமாகப் போய் - கல்வீச்சு, வன்முறைக் கலவரங்களை நடத்தி கைதாகியிருக்கிறார்கள். கைது கலவரம் என்ற சூழ்நிலை வந்த பிறகு அவைகள் கட்டாயமாக செய்திகளாக்கப்படும் நிலை உருவாகிவிடுகிறது அல்லவா? அதுதான் அவர்கள் நோக்கம்.

1966-ஆம் ஆண்டு இந்த கூட்டத்தின் சதிவலையிலே மறைந்த ஜெயப்பிரகாசரும் (ஜெ.பி)சிக்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அவர்களின் சுயரூபத்தை உணர்ந்து கொண்டு விட்டார்.

1968-ஆம் ஆண்டில் ஜெயப்பிரகாசர் இவ்வாறு பிரகடனப்படுத்தினார். "ஆர்.எஸ்.எஸ். ஒரு வகுப்பு வாத பாசிச இயக்கம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்."

புதுடில்லியிலே 1968ஆம் ஆண்டு வகுப்புவாத எதிர்ப்பு இரண்டாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு ஜெயப்பிரகாசர் நாராயண் பேசிய பொழுது இவ்வாறு தெரிவித்தார். அவரது உள்ளத்தின் உணர்வுகள் பீறிட்டுக்கிளம்பின.

"ஜனசங்கம் தன்னை ஒரு மதச்சார்பற்ற அமைப்பு, என்று கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால்-இவர்கள் ஆர்.எஸ்.எஸ். எனும் எந்திரத்தால் இயக்கப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள். அந்த ஆர்.எஸ்.எஸ். முடிச்சுக்களிலிருந்து, ஜனசங்கத்தினர் தங்களை முழுமையாக வெட்டிக் கொள்ளாதவரை இவர்கள் மதச்சார்பின்மை கொள்கைக்காரர்கள் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது" (ஆதாரம் 'Secular Democracy' ஆண்டு மலர் 1969)

மயிலிடம் இறகுக்குக் கெஞ்சுவது போல் வகுப்பு வாத்தைக் கைவிடுங்கள் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் மனு போட்டு மனம் சலித்த ஜெயப்பிரகாஷ்... இறுதியில் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கே ஒரு கடிதம் எழுதினார்.

1976-ம் ஆண்டு -மார்ச் 2-ம் தேதியிட்டு ஜெயப்பிரகாஷ்-நாராயண் அன்றைய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

'அரசாங்கத்தில்-தலைமையைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை என்னிடம் பல நண்பர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தங்களை ஒரு கலாச்சார இயக்கம் என்று சொல்லிக் கொண்டு இந்த முகமூடியோடு அரசியலில் செல்வாக்கு பெறவிரும்புவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்து ராஷ்டிரக் கொள்கையை நான் எப்போதுமே கண்டித்து விந்திருக்கிறேன். அது மிகவும் ஆபத்தான தத்துவம். நமது -பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்ட இந்திய நாட்டுக்கு நேர் எதிரான தத்துவம். (I have always condemned the Hindu Rastravad of R.S.S. because it is a dangerous idelogy and is contradictoy to our ideal of composite indian nation)

-என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் அந்தக் கடிதத்தில் தனது கருத்துக்களை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தார்!

ஜெயப்பிரகாசர் உளம் புழுங்கி-அன்றைய பிரதமர் மொரார்ஜிக்கு எழுதிய கடிதத்தை மொரார்ஜியிடம்-அனுப்புவதற்கு முன்பு அந்தக் கடைசி நேரத்தில் கூட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஜெ.பி.யை சூழ்ந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்.பற்றி சொல்லப்பட்டிருக்கிற வாசகங்களை அகற்றுமாறு வற்புறுத்தினர்! ஆனால் ஜெ.பி.அதற்குப் பணிந்து விடவில்லை. ஜெ.பி கடிதத்தின் கடைசி வரிகள் இப்படி எச்சரிக்கையோடு முடிந்தது.

'நீங்கள் இந்த நாட்டின் பிரதமர்.ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வகுப்பு வெறியை மாற்ற வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் அதைச் செய்யாவிட்டால், நாட்டில் உள்ள சிந்தனையாளர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்த்துப் போராடி அதைச்செய்ய வேண்டிய நிலைவரும்'. (ஜெ.பி. கடிதத்தற்கான ஆதாரம்: "தினமான்" இந்திவார ஏடு -ஏப்ரல் 8, 1979)

No comments: