Sunday, November 28, 2004

முதலிரவு டிப்ஸ் - 2

சாந்திமுகூர்த்தத்தை 2 நாள் தள்ளிவைத்துவிட்டு ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ள முயலலாம். இளமனைவியின் பிஞ்சு விரல்களுடன் உங்கள் விரல்களை கோர்த்து நடந்து செல்லுங்கள். விரல்களுக்கிடையில் ஓராயிரம் வால்ட்ஸ் மின்சாரம் பாயும். சாந்திமுகூர்த்தத்திற்கு பின் எத்தனை வாட்ஸ் என்று நீங்களே பார்க்கலாம். சினிமா கொட்டகையை தவிர்த்து பார்க், பீச் என செல்லலாம். இந்த இரண்டுநாளில் நீங்கள் சந்தித்தது, சாதித்தது, பேசியது, விளையாடியது, ஆகியவை பசுமரத்தாணிபோல் உங்கள் வாழ்க்கை எங்கும் உயிருடன் இருக்கும்.

நகராட்சியில் பிறந்த பதிவு வாங்குவதற்கு எத்தனை அலைச்சல் தெரியுமா? பியூன் நம்மிடம் "25 ரூவா கொடுசார் 10 நிம்சத்தில பெர்த் சர்டிஃபிகேட் தர்றேன்" என்று கொடுத்தால் இதுக்குபோயா 25 ரூபாய் என்போம். உங்களை அலையவிட்டு, பிறகு 25 ரூபாய் கேட்டால் அதன் பெருமதி விளங்கும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் பொருளின் மதிப்பு விளங்க வேண்டும். அட பசித்து சாப்பிட வேண்டும் அவ்வளவுதான்.

மனைவியிடம் உங்களைப்பற்றி உங்கள் குணநலன்களைப் பற்றி சொல்லுங்கள். பொய்யாக பீற்றிக்கொள்ள வேண்டாம். உங்களின் வாழ்க்கை துணைவி உங்களுடனே எப்பொழுதும் இருக்கப்போகிறவள். அவளிடம் நான் தங்க பாத்திரத்தில்தான் சாப்பிடுவேன், பன்னீரில்தான் குளிப்பேன் என்று கப்ஸாவிட்டீர்கள் என்றால் சீக்கிரத்தில் உங்களின் சாயம் வெளுத்துப்போய்விடும்.

சிலர் தன்னைப்பற்றிய வண்டவாளத்தை எல்லாம் பிரத்யேக ஸ்டேட்டஸ் என நினைத்து மனைவியிடம் சொல்லி வாங்கிக்கட்டிக் கொள்வார்கள். இப்படிதான் முதலிரவு அன்று தன் மனைவியிடம் ஒவ்வொரு பிள்ளையார் கோயிலாக போய் சைட் அடித்தது, தண்ணி அடித்தது, பெண்பழக்கம் உள்ளது எல்லாவற்றையும் திருமணமான இரவு மனைவிடம் சொல்லவே, அவள் அலறி அடித்துக்கொண்டு தன் தந்தையிடம் சென்று "போயும் போயும் குடிகாரனை எனக்கு கல்யாணம் பண்ணிவைத்துவிட்டீர்களேப்பா" என்றாளாம்.

அப்படியென்றால் மனைவியிடம் உண்மையை சொல்லக்கூடாதா என்று கேட்கலாம். நிச்சயமாக சொல்லலாம். இப்பொழுது அல்ல. உங்களின் நற்குணங்களை தெரிந்துக்கொண்ட பின்னர் சொல்லலாம். அப்படியில்லையென்றால் உங்களின் மைத்துனியைக்கூட உங்கள் அருகில் வர அனுமதிக்கமாட்டாள் உங்கள் மனைவி.

இதையே இன்னொருவிதமாக நினைத்துபாருங்கள். திருமணத்திற்கு முந்தைய அவளின் இருண்ட வாழ்க்கையைப்பற்றி நீங்களோ அல்லது உங்களின் இருண்ட வாழ்க்கையைப்பற்றி அவளோ தெரிந்துக்கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள். பிறிதொரு காலத்தில் உன்னையைப்பற்றி தெரியாதா? என்னைப் பற்றி தெரியாதா? என்று சொற்போருக்காகவா? பழையவைகளை கிளறுவதைவிட இனி நடக்கப்போகிறதை பாருங்கள் சார்.

இதற்கு மேல் கட்டுரையை நீட்ட விரும்பவில்லை. தேவையான விஷயங்களை பிரிதொரு சமயத்தில் பல்வேறு தலைப்புகளில் தர முயற்சி செய்கிறேன். அதற்குமுன் உங்களுக்கு ஒரு புத்தகத்தை மட்டும் சிபாரிசு செய்கிறேன். அது சுவாமி சுகபோதானந்தாவின் "அகமே ரிலாக்ஸ் ப்ளீஸ்". இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் என்று சாதிமதம் பார்க்காமல் திருமணத்திற்கு முன்பு படிக்கவேண்டிய புத்தகம்.

(இதற்கு முன் அவர் வெளியிட்டது "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்". இணையத்தில் கூட இப்புத்தகம் கிடைக்கிறது) மனிதம், மனிதம் என்று சொல்லிக்கொண்டு மறுபுறம் மதத்தின் பெயரால் வெட்டிக்கொள்ளும் இக்காலத்தில், அனைத்து மதத்தில் இருந்தும் நல்ல கருத்துக்களை, கதை வடிவில் நகைச்சுவையாக சொல்பவர் சுவாமிஜி. நான் சுவாமி சுகபோதானந்தாவை சந்யாஸியாக பார்க்கவில்லை. மனிதர்களின் குணநலன்களை அறிந்த உளவியல் மருத்துவராக பார்க்கிறேன்.

4 comments:

மீனாக்ஸ் | Meenaks said...

அன்புள்ள MEA, இந்த இரண்டு பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளை மேல்Kind-ல் மறு பதிப்பு செய்ய் ஆனுமதி உண்டா? உங்களின் பெயரோடு.

MEA said...

நிச்சயமாக அனுமதி உண்டு (இனி புதிதாக எழுதுபவைகளுக்கும் சேர்த்து).

அன்பு said...

ரொம்ப முக்கியமான, அவசியமான, அத்தியாவாசியமான, தேவையான பதிவு. நன்றி, தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

/*அட பசித்து சாப்பிட வேண்டும் அவ்வளவுதான்.*/

Antonym: காய்ந்த மாடு எதிலோ விழுந்த மாதிரி