Thursday, November 25, 2004

அரசியல் சதுரங்கம்

அரசியலில் நிலையான நண்பனும் இல்லை நிலையான எதிரியும் இல்லை என்பார்கள். திரு ஜயேந்திரர் கைது நடவடிக்கைக்கு பிறகு கலைஞர் அவர்களின் அறிக்கைகளும் அப்படிதான் உள்ளது. எது எப்படி இருந்தாலும் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் தி.மு.க.வை ஆதரிக்கப்போவதில்லை. அப்படியே ஆதரித்தாலும் தி.மு.க.வினால் தனக்கு கிடைக்கும் பயன்களை நுகர்வதற்காக இருக்குமே தவிர அம்மா மேல் உள்ள இனம்புரியாத பாசம் இருக்கப்போவதில்லை.

பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை கண்டித்து அறிக்கை விடுவதில் அவர்கள் கடைபிடிக்கும் மென்மையான போக்கு கூர்ந்து பார்த்தால் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்றார் அத்வானி. இனி தங்களின் கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் இடமில்லை என்று தீர்மானம் இயற்றினால் நன்றாக இருக்கும்.

திரு ஜயேந்திரரின் கைதுக்கு சதுர்வேதி சாமியார்தான் சந்தோசப்பட்டிருப்பார். காரணம் பிரேமானந்தாவுக்கு எழுதப்பட்டதுபோல் சதுர்வேதி சாமியாரின் அம்பலத்தொடர் பத்திரிக்கையாளர்களால் எழுத முடியாமல் நின்று போனதுதான். இதில் சாமியார் வீட்டில் மாமியார் மாமியார் வீட்டில் சாமியார் என்று ஸ்பெஷல் செய்தி போட்ட பத்திரிக்கைகளும் உண்டு.

சட்டமன்ற கல்லூரியில் MLA மாணவர்கள் பெஞ்ச் தட்டி அம்மாவின் சாதனை பாட்டு பாடுகிறார்கள். வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டது அம்மாவின் சாதனை என்றால், ஜயேந்திரர் கைதுக்கு காரணம், சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்வானேன். அதையும் தங்கள் ஆட்சியின் சாதனை என்று சொல்வாரா அம்மா?.

சட்டம் தன் கடமையை செய்கிறது என்று சொல்லும் முதலமைச்சர் அவர்களே! அதற்கு இடையூறாக இருக்கும் பி.ஜே.பி-யிடம் இனியாவது கூட்டு சேராமல் இருப்பீர்களா?

திரு ஜயேந்திரர் கைதுக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்ற கலைஞர் சொன்னதற்கு காரணம் அம்மாவுக்கு அவப்பெயர் ஏற்படவேண்டும் என்பதற்காக என்றார் ஒரு காவி கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். அப்படியென்றால் திரு ஜயேந்திரரை கைது செய்தது சரி என்கிறாரா? அப்படி சரி என்றால் ஏன் உண்ணாவிரதமும், பந்த்-ம் நடத்தவேண்டும்.

இந்தியாவில் உள்ள சட்டத்தின் ஓட்டைகளை பி.ஜே.பி. வகையறாக்கள் அறியாதவர்களல்ல. ஆனாலும் அம்மா எப்பொழுது எந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். தெரிந்தோ தெரியாமலோ திரு ஜயேந்திரரை கைது செய்துவிட்டார். பிடி நழுவினால் அம்மாவின் நிலை சும்மாதான்.

இந்த இடத்தில் கலைஞர் மட்டுமல்ல. அம்மா இருந்தாலும் உள்நோக்கம்தான் கற்பிப்பார். ஏன் இதையும் தாண்டி செய்தாலும் மறுப்பதற்கில்லை. கலைஞர் சொன்ன உள்நோக்கத்திற்கு காரணங்களை வெளியிட்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகள் தனக்கு பிடிக்காதவரை மட்டுமே உள்ளே தள்ளுவது என்று வழக்கமாக்கி இருக்கிறார்கள்.

தலைவர்களுக்கு ஓட்டு போட்டு எதற்காக சட்டமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்? மக்களுக்கு சேவை செய்யத்தானே. ஆனால் இன்றைய தலைவர்கள் எதிர்கட்சியினரை பழிவாங்கவேண்டும், பழிதூற்ற வேண்டும், பணம்புரட்ட வேண்டும் அல்லது கருப்பு பணங்களை காப்பாற்ற வேண்டும் என்றே ஆட்சிக்கு வருகிறார்கள்.

மக்களுக்கு Best from Worst தேர்ந்தெடுப்பதே தற்போதைய விதி என்றாகிவிட்டது. இன்று தமிழ்நாட்டுக்கு தேவை மக்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற தலைவர்.

2 comments:

மாயவரத்தான் said...

Samiyaar veettil maamiyaar illai adhu....Itz 'Maamiyaar veettil Saamiyar'!

MEA said...

நன்றி வாத்தியாரே!