Tuesday, November 30, 2004

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது

"ஜெயலலிதா எப்போதும் இந்துக்களின் பாதுகாவலராக இருந்ததில்லை" என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டிரில் வெளிவந்த திரு பொன். ராதாகிருஷ்ணன் அவர்களின் பேட்டி.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
http://kumudam.com/reporter/mainpage.php

முதல்முறையாக தமிழக பி.ஜே.பி. மேடைகளில் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இருபெரும் திராவிடக்கட்சிகளுமே கடுமையாக வறுபடத் தொடங்கியிருக்கின்றன. காரணம், சங்கராச்சாரியார் கைது விவகாரம்தான். மாறியிருக்கும் இந்தப் புதிய சூழ்நிலையில் தமிழக பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனைச் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

‘சட்டத்தின் முன்பு எல்லோரும் சமம்’ என்கிறபோது, சங்கராச்சாரியார் கைதுக்காக பி.ஜே.பி. இவ்வளவு ஆக்ரோஷப்படுவது சரியா?
‘‘சங்கராச்சாரியார் கைதை நாங்கள் தேசத்தின் தன்மானப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். நூறு கோடி மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரியவர் அவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவரை, ஒரு குற்றவாளியைப் போல் நடத்துவது முறையா? நாளை அவர் மீதான புகார்கள் பொய்யென நிரூபணமாகும்போது, அவருக்கு இழைக்கப்பட்ட அவமானங்களை இந்த அரசால் முழுமையாகக் களைய முடியுமா? என்பதே எங்கள் கேள்வி.’’

சட்டரீதியான இந்தப் பிரச்னையை சட்டரீதியாகவே எதிர்கொள்வதுதானே முறை?
‘‘சட்டபூர்வம் என்பது அவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு. அதை சட்டரீதியாகத்தான் எதிர்கொண்டு வருகிறார். அதேசமயம் அவரது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக்கூடாது அல்லவா?

அரசியல்வாதிகளுக்கு சிறையில் கேட்டதெல்லாம் கிடைக்கிறது. பல சிறைகளே பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், காஞ்சி சுவாமிகளுக்குக் கழிப்பறை வசதிகூட செய்து கொடுக்க மறுக்கிறார்கள். ஒரு சட்டியைத் தூக்கிக் கொடுக்கிறார்களாம். இது எவ்வளவு பெரிய அவலம்? எமர்ஜென்சி காலத்தில் கூட கைது செய்யப்பட்ட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு மரியாதையாக நடத்தப்பட்டார்கள். இப்போது அதைவிட மோசமாக நடக்கிறது.’’

அப்படியானால் ‘பி.ஜே.பி., சங்கராச்சாரியார் கைதைக் கண்டிக்கவில்லை; அவர் நடத்தப்படும் விதத்தைத்தான் எதிர்க்கிறது’ என எடுத்துக்கொள்ளலாமா?
‘‘கைது நடவடிக்கையே தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. அவர்தான் எப்போதும் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தாரே!’’

இந்த விவகாரத்தில் இந்துத்வா அமைப்புகள் நடத்தும் பந்த் உள்ளிட்ட போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைத்ததாகத் தெரியவில்லையே?‘‘
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநாடு, ஆர்ப்பாட்டம் போன்றவற்றிற்கு பி.ஜே.பி. ஏற்பாடு செய்திருந்ததால் பந்த் கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த நாளில் அத்வானி தமிழகத்திற்கு வந்திருந்தார். எனவே அன்று எப்படி பந்த் நடத்த முடியும்? ஆனால், தேசிய அளவில் ‘பந்த்’க்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவே செய்தது.’’

சரி.. சங்கராச்சாரியார் கைதுக்காகப் போராடும் இந்து அமைப்புகள் சங்கர்ராமன் கொலைக்காக என்ன செய்தன?
‘‘சங்கர்ராமன் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அந்தக் கொலையைக் கண்டித்து அப்போதே இந்து அமைப்புகள் அறிக்கை விட்டிருக்கின்றன. அதேசமயம், தேசமே மதிக்கும் ஒரு பெரியவரை அவமானப்படுத்துவது என்பது சீரியஸான விஷயம்.’’

இப்போது ஜெயலலிதாவைத் தாக்கித்தள்ளும் இதே இந்து அமைப்புகள்தானே அண்மைக்காலம்வரை அவரை மோடிக்கு இணையாக வைத்துப் போற்றிக் கொண்டாடின?
‘‘சிலர் அப்படிப் பேசியிருக்கலாம். உண்மையில் ஜெயலலிதா எப்போதுமே இந்துக்களின் பாதுகாவலராக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், திராவிடக் கட்சிகள் எதுவுமே இந்துக்களுக்கு அனுசரணையான கட்சிகள் அல்ல. அந்தந்தத் தேர்தல்களுக்குத் தகுந்தாற்போல் ஜாதி, மத பிரச்னைகளைக் கிளறிவிட்டு ஆதாயம் தேடுவதுதான் திராவிடப் பாரம்பரியம். ஜெயலலிதா மதமாற்ற தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தாரென்றால், அதற்குக் காரணம் மக்களிடையே பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்புகள் உருவாக்கி வைத்திருந்த விழிப்புணர்வுதான்.’’

சங்கராச்சாரியார் விவகாரத்தில் கலைஞர் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே?
‘‘கலைஞர் தனது வாக்கு சாதுர்யத்தால் ‘வாக்குகள்’ வாங்கும் நோக்கோடு பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில் அவர் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ‘இரண்டு மாதங்களுக்கு முன்பே சங்கராச்சாரியாரைக் கைது செய்திருக்கலாமே? அதுவரை வேறு ஏதேனும் பேரம் நடந்ததா?’ என்றெல்லாம்தான் தனக்கேயுரிய பாணியில் அவர் கேட்கிறார். எனவே, அவரது பேச்சு ஏமாற்று வேலை. மேலெழுந்த வாரியாக அதைப் பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.’’

தமிழக அரசியலில் பி.ஜே.பி. இப்போது தனிமைப்படுத்தப்பட்டது போல் உணர்கிறீர்களா?
‘‘இல்லை. மக்களோடு நாங்கள் ஐக்கியப்பட்டிருக்கிறோம்.’’

சங்கராச்சாரியார் விவகாரம் எதிர்கால தமிழக அரசியலை எந்த அளவுக்குப் பாதிக்கும் என நினைக்கிறீர்கள்?
‘‘பி.ஜே.பி. ஆதரவு இல்லாமல் இங்கே யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்கும்.’’
_______________________________________________
Related news links
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory5.html
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory4.html
http://dinakaran.com/daily/2004/Nov/30/others/topstory0.html
http://www.dinakaran.com/daily/2004/Nov/30/flash/flasnews0.html
http://www.thatstamil.com/news/2004/11/30/cancer.html
http://arunviews.blogspot.com/2004/11/blog-post_30.html




No comments: