Monday, January 24, 2005

புரட்சி" வாழ்க்கையின்' புரட்டுகள்

(தொடர் 15)

மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து மத வெறியரான அதே மூஞ்சி என்ற பார்ப்பனர்தான் அவருக்கு இப்போது உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்புகொள்ள முடியும் என்று விரும்பினார். மராட்டிய மன்னன் சிவாஜியும், திலகரும் இவரது ஞானத் தந்தைகள்.

1910ம் ஆண்டிலிருந்து 1915ம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற போது, இவர் தங்கிய விடுதிதான் அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங்களாக செயல்பட்டது. பல தீவிரவாத இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அங்கு வருவது உண்டு.

இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும். ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வமான, சி.பி.பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல்(பக் 13) கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"கல்கத்தாவுக்கு சென்றவுடன் ஹெட்கேவர் அனுசிஹிலன் சமிதி என்ற அமைப்பின் நெருக்கமான உறுப்பினராக சேர்ந்துக் கொள்ளப்பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த பல முக்கியமான ரகசிய வேலைகள் அவருக்குத் தரப்பட்டன. புரட்சியாளர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களை ரகசியமாக கொண்டு சென்றார்" - என்று கல்கத்தா போன உடனேயே இவர் புரட்சிக்காரராக மாறிவிட்டதுபோல், ஒரு தோற்றத்தைத் தந்து எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால் வேறாக இருக்கிறது!

ஜே.ஏ.குர்ரன்(J.A.Curran) எழுதிய "Militant Hindusiam in Indian Politics" நூலில்(பக்கம்13ல்) உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!

"கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்தாக சொல்கிறார்கள். அதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது."

-என்று ஹெட்கேவரின் "புரட்சி" வாழ்க்கையின்' புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.

ஆபத்து தரக்கூடிய பல ரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர எந்த வேலையைச் செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக்கொண்டு போனார் என்பதற்கான விளக்கங்கள் எதையுமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!

கல்கத்தாவிலே சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்படவில்லை' ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறும் ஆர்.எஸ்.எஸ்.வரலாறும் ஒன்றே என்கிறார்கள். இந்த 'சத்தியகீர்த்திகள்'

ஆனால், இந்த 'உத்தம' 'புத்திரர்'களின் கதைகள் பொய்மைகளின் மூட்டைகளாகவே இருக்கின்றன.

கல்கத்தாவில், மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படுகிறது! அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Sunday, January 23, 2005

குரு பக்தி ஒன்றே

(தொடர் 14)

இப்படி குரு பக்தியோடு, குருவின் கருத்துக்களில் சீடர்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்ற முறையோடுதான், ஹெட்கேவர் இந்த அமைப்பை நடத்திச் சென்றிருக்கிறார்! சிந்தனைகளுக்கு, விளக்கங்களுக்க அங்கே இடம் இல்லை!

எனவே தான் 'நீங்கள் டாக்டர் ஜீயைப் பற்றி(ஹெட்கேவர்) தெரிந்து கெள்ள வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ்.பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஆர்.எஸ்.எஸ்.பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? டாக்டர்ஜி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரும்ப திரும்பச் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

"மரியாதைக்குரிய டாக்டர்ஜி அவர்களும் ஆர்.எஸ்.எஸ்.சும் ஒன்றுக்கொன்று இணைந்தது. டாக்டர்ஜி வாழ்க்கையைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் எழுச்சி உணர்வுகளால் ஆர்.எஸ்.எஸ்.சின் முறையான வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும்."

-என்கிறார் மறைந்த ஆர்.எஸ்.எஸ்.முன்னால் தலைவர் தேவரஸ் (ஆதாரம்: சி.பி.பிஷிகார் எழுதிய நூல் பக்-5) எனவே ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ்.தன்மையை பிரதிபலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக இறங்குவோம்!

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Wednesday, January 19, 2005

மதவெறியர்

(தொடர் 13)

1889ம் ஆண்டு, ஏப்ரல் முதல் தேதி, நாக்பூரில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவருக்குப் பிறந்த மூன்றாவது மகன் தான் ஹெட்கேவர்! தலைமுறையாக அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது இந்தக் குடும்பம் என்பதிலிருந்தே பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித்தனத்தின் சூழலில் அவர் வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெளிவாகவே விளங்கும். அதற்கு பல தலைமுறைகளுக்கு முன்பே ஆந்திர மாநிலத்தில் 'குந்த்குர்த்தி' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த அய்தராபாத் நிசாம் மன்னர்களின் ஆட்சியிணை எதிர்த்துப் போராட முடியாமல், வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்த குடும்பமாகும்!

எனவே, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறி, முஸ்லீம்களின் எதிர்ப்பு என்ற உணர்வுள்ள குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர் ஹெட்கேவர்.

1902ம் ஆண்டில், ஹெட்கேவரின் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவரது சகோதரர் மகாதேவ சாஸ்திரி செய்து வந்த தொழிலும் பார்ப்பனப் புரோகிதத் தொழில்தான்!

'மூஞ்சி' ஆர்.எஸ்.எஸ்.சைத் தோற்றுவித்த அய்வர் குழுவில் ஒருவர். இந்து ராஷ்டிரத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான துடிப்பு கொண்டிருந்தவர் இந்த மூஞ்சி!

ஹெட்கேவருக்கு நல்ல உடல் வலிவு உண்டு. குத்துச்சண்டை, நீச்சல் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருச்சண்டைகளில் அவர் வீரராகத் திகழ்ந்தார். எனவே, அக்கால் அரசியலுக்கு இவர் சரியானவர் என்ற முடிவுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்தினார் இந்த 'மூஞ்சி'.

ஆர்.எஸ்.எஸ்.ஒரு வன்முறைக் கும்பலாகவும் பார்ப்பன வெறி அமைப்பாகவும், முஸ்லீம்கள் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் கல்லில் செதுக்கப்பட்ட உண்மைகளே என்பதற்கு ஹெட்கேவர் வளர்ந்த, உருவான சூழ்நிலைகளே சரியான சான்றுகளாகும்.

"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?"

"அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."


ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்திலே, இளைஞன் ஒருவன் கேட்ட கேள்விக்கு ஹெட்கேவர் மேற்கொண்ட பதிலை அளித்தார்!

அவரைப் பொறுத்தவரை, தன்னுடைய 'ஆளுமை சக்தியால்' தொண்டர்களைக் கட்டாயப்படுத்தி தனது அமைப்புக்கு இழுத்தவரே தவிர நியாயப்பூர்வமான அறிவு வாதங்களை எடுத்து வைத்து விவாதித்து அதன் மூலம் தனது அமைப்புக்கு பலம் சேர்ந்தவர் அல்ல!

இந்து ராஷ்டிரம் என்பது என்ன என்ற கேள்விக்கு, விவாதபூர்வமான விளக்கங்கள் எதையும் தராமல், தன்னையே முன்னிலைப்படுத்தி, நிலைமையை சமாளித்தார் ஹெட்கேவர்!

(இந்த உரையாடலை, ஹெட்கேவரின் வாரிசு கோல்வாக்கர் எழுதிய 'ஸ்ரீ குருஜி சம்ஹாரதர்சன்' என்ற இந்தி நூலில் 5-வது அத்தியாயத்தில் 22-23 பக்கங்களில் குறிப்பிடுகிறார்)

தொடர்ந்து கோல்வாக்கர் அதே நூலில் மேலும் எழுதுகிறார்!

"நான் தான் அந்த முட்டாள் என்ற ஒரு வார்த்தைக்கு மேல், அவர் பேசவில்லை. எந்த வாதத்தையும் வைக்கவில்லை. கேட்டவரை சமாதானப்படுத்திடும் நியாயங்களையும் சொல்லவில்லை. அதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால் அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னவுடனேயே, அங்கு கூடியிருந்த எல்லா உறுப்பினர்களும் சமாதானமடைந்து, தாங்கள் 'சுயம் சேவக்காக, உறுதி எடுக்க முன்வந்தனர்."

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Monday, January 17, 2005

மிகப்பெரிய ஆபத்து

(தொடர் 12)

இந்து மகாசபைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. இரண்டும் ஒரே அமைப்புகளாகவே ஒன்றுபட்டு நின்றிருக்கின்றன. ஆனால் இதைச் சொல்வதற்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெட்கப்படுகிறார்கள். காந்தியாரைக் கொன்ற அதே கூட்டம் தான் என்ற உண்மை அனலாக கொதித்து தங்களை சுட்டெரித்துவிடும் என்ற அச்சத்தால்தான். இந்தப் பெயர் இருட்டடிப்பை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றார்கள்! ஆனாலும் அவர்களையும் அறியாமல் உண்மைகள் வெளிவந்து விட்டன.

அய்வர் குழு ஆலோசனைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். முதல் கூட்டம் எங்கு நடந்தது? அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் யார்? எந்தச் சூழ்நிலையில் உருவானது? இதுபற்றி பால்க்கார் என்ற ஆராய்ச்சியாளர், தனது ஆய்வுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'அவர்களின் முதல் கூட்டம் நாக்பூர் நகரத்தில், பார்ப்பனர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியான 'மொகைத்வாதே'(Mohite Wade) என்ற இடத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் எந்த ஜாதிக்காரர்கள் என்ற எண்ணிக்கையை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வைத்திருக்கவில்லை என்றாலும், நான் பார்த்த ஆவணங்களிலிருந்து ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். அப்போது இந்த அமைப்பில் இருந்த உறுப்பினர்கள் எல்லாம் பார்ப்பனர்களே" என்று எழுதுகிறார்.

இந்த அமைப்பு தோன்றுவதற்காக, அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றையும் பால்க்கார் சுட்டிக்காட்டுகிறார்.

"நாக்பூர் பகுதி போன்ஸ்ஸி என்ற அரச வம்ச ஆட்சிக்கு கீழே இருந்து வந்தது. அந்த அரசர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கப்பட்டனர் அவர்களின் பரம்பரைத் தொழிலிலே ஈடுபட்டு வந்தனர். மூன்றாவது ராகுஜி மன்னன் அப்போது அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு வாரிசு இல்லாததால், பிரிட்டிஷார் தங்களிடமிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிரிட்டிஷாரின் நேரடியான ஆட்சிக்குக்கீழ் அந்தப் பகுதியைக் கொண்டு வந்து விட்டனர். இந்த ஆட்சி மாற்றத்தைக் கண்டு பார்ப்பனர்கள் அஞ்சினர்! தங்களுக்கு இருந்த உயர்ந்த இடம் பறிபோய்விடுமோ என்ற பதைத்தனர். அப்போது உடன்கட்டை ஏறுதல் ஒழிப்புச் சட்டம், விதவைகள் மறுமணச் சட்டம் ஆகிய இந்துச் சட்டத்திருத்தங்கள் வந்திருந்தன. இவைகளைக் கண்டு பார்ப்பனர்கள் பதறி, இந்து தர்மமே அழியப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது நாக்பூரில் உள்ள ஐகருத்ரேஷ்வர் கோயில் சுவரில் ஒரு வாசகம் ஒட்டப்பட்டது அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நாக்பூரில் வாழும் எல்லா பிராமண புரோகிதர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு! சாஸ்திரிகளானாலும், பண்டிட்களானாலும், அர்ச்சகர்களானாலும் நான்கு வேதங்களின் யஜ்னிக்குகளாக இருந்தாலும் அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பவராக இருந்தாலும் எல்லா பிராமணர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறோம். இப்போது மிகப்பெரிய பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்து அரசு இருக்குமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது எனவே, நாம் குறிப்பிட்ட நாளில், நமக்கு வந்துள்ள பேராபத்தைத் தடுக்க ஜகருத்ரேஷ்வர் கோயிலில், எல்லா நாக்பூர் பிராமணர்களும் திரள வேண்டும். பகவானுக்கும் ருத்ராபிஷேகம் செய்து மந்திரங்கள் ஓதி, சடங்குகளை நடத்தவேண்டும். இதை எந்த பிராமணராவது செய்யத் தவறினால், அவர்கள் பிராமணர்களே அல்ல என்று அறிவிக்கப்படும்."

இவ்வாறு பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்ததை அவர்கள் பறைச்சாற்றினார்கள் என்று பால்க்கார் குறிப்பிடுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் தான் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.உதயமானது.

இந்த உண்மைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் முதல் தலைவர், 'சர் சங்சாலக்' என்று ஏற்றிப்போற்றப்படும் அந்த கேஷவ பல்ராம் ஹெட்கேவர் யார் என்ற விவரங்களை ஆராய்வோம்.

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Sunday, January 16, 2005

இன்னொரு காரணம்

ஆர்.எஸ்.எஸ் மூலகர்த்தாக்களே காந்தியாரை கொலை செய்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் என்ற உண்மை வெளியாகி விட்டால், அவர்கள் முகத்திரை கிழிந்துவிடும் அல்லவா? எனவேதான் இந்த இருட்டடிப்பு சூழ்ச்சி.

(தொடர்... 11)


இன்னொரு காரணமும் உண்டு.

ஆர்.எஸ்.எஸ்.என்ற அமைப்பை உருவாக்கிய பெருமை ஹெட்கேவருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்தப் பெருமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மற்றொரு நோக்கம். தலைவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இல்லாத பெருமைகளை ஏற்றிக் சொல்வது இவர்களின் வாடிக்கை.

ஆனால், என்னதான் இரும்புத் திரைகளைப் போட்டு மறைத்தாலும் உண்மைகள் வெளிவராமல் போய்விடுமா?

காந்தியாரைக் கொலை செய்த கோட்சே, ஒரு இந்து மகாசபைக்காரர் என்றவுடன், தங்களுக்கும் இந்து மகாசபைக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் நிறுவனர்களே, இந்து மகாசபைத் தலைவர்கள்தான்.

ஆர்.எஸ்.எஸ்.துவக்கநாளில் ஹெட்கேவர் இல்லத்தில் கூடிய அந்த '5 பேர்' யார் என்ற முகவரிகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன.

அந்த அய்வர் குழுவிலே ஒருவர் எல்.வி.பராஞ்சிபே, ஹெட்கேவர் இறந்து போனவுடன், தனது நினைவலைகளை இந்தப் பராஞ்சிபே ஒரு கட்டுரையில் சுழலவிடுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அந்த அய்ந்துபேர்கள் பெயர்களையும் அவரே குறிப்பிட்டு ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். மூலவர்களாக விளங்கிய இந்துமகாசபைத் தலைவர்கள் 5 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுவிட்டன. (இந்தக் கட்டுரை 'கேசரி', என்ற நாளேட்டில் ஜூலை 5, 1940ல் வெளிவந்திருக்கிறது.)


அதுமட்டுமல்ல. இன்னொரு திடுக்கிடும் செய்தி! 1930ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஹெட்கேவர் சிறைச்சாலையில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ்.தலைமைப் பதவியான 'சங்சாலக்' பதவியை ஏற்று ஆர்.எஸ்.எஸ்.ஸையே வழிநடத்திச் சென்றவர் யார் தெரியுமா? எல்.வி.பராஞ்சிபே என்ற அய்வர் குழுவில் ஒருவராக இருந்த அதே இந்து மகாசபைத் தலைவர் தான்! பின்னர் 1945ம் ஆண்டு காஷிநாத் பாந்த்லிமாயி (இவர் அப்போது மராட்டிய மாநில ஆர்.எஸ்.எஸ்.தலைவர்) பாபாராவ் சவர்க்கார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கட்டுரை எழுதினார். இந்த பாபாராவ் சவர்க்கார் என்ற இந்து மகாசபைத் தலைரவரும் ஆர்.எஸ்.எஸ்.சை துவக்கிய அய்வர் குழுவில் ஒருவர் என்ற உண்மையை இந்த இரங்கல் கட்டுரையில் அந்த மராட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர் வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் அவர்களையும் அறியாமல் உண்மைகள் வெளிவந்து விட்டன.

(இந்தக் கட்டுரை வெளியான பத்திரிகை 'விக்ரம்' என்ற மராட்டிய வார ஏடு - மார்ச் 31,1945)
____________
நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின்
"ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

Friday, January 07, 2005

காந்தியாரைக் கொலை செய்த இந்து மகாசபை

(தொடர் - 10)

1925ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி! அது ஒரு 'விஜயதசமி' நாள்! அன்றுதான் 'ராஷ்டிரிய சுயம் சேவக் சங்' என்ற நஞ்சு பிறப்பெடுத்தது!

(Hinduism is our Nationalism) 'இந்துயிசமே எங்கள் தேசியம்' என்ற பிரகடனத்தோடு உருவானது அந்த அமைப்பு!

வகுப்புவாதப் பிரச்சினைக்கு காந்தியார் காட்டிய 'சமரசப் பாதை'யைப் பின்பற்றுவது தான் சரியான வழி என்ற எண்ண ஓட்டம் அன்றைய சூழ்நிலையில் மக்களிடையே நிலவியது! இந்து - முஸ்லீம்களிடையே குறைந்த பட்ச ஒற்றுமையை உருவாக்கி அகிம்சை முறை ஒத்துழையாமை இயக்கங்கள் மூலம் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் காந்திய முறைக்கு மக்களிடையே செல்வாக்குப் பெருகியது.

ஆனால், இந்துக்களே போராடி இந்த நாட்டை இந்துக்களின் நாடாக்க வேண்டும் என்று துடித்த பார்ப்பனர்கள், காந்தியாரின் இந்தவழி, தங்கள் நோக்கத்தையே சிதைத்துவிடும் என்று அஞ்சினார்கள். வெள்ளைக்காரர்கள் எதிர்ப்பு என்பதைவிட முஸ்லீம்கள் எதிர்ப்பு என்பதிலேதான் அவர்களுக்கு ஆர்வமும் கவனமும் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை வருவாக்க வேண்டிய அவசியத்தை - அதன் முதல் தலைவரான 'ஹெட்கேவர்' இவ்வாறு கூறுகிறார்.

"காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவால் நாட்டின் எழுச்சி குறைந்து வருகிறது. அதன் காரணமாக தீய சக்திகள் கொடூரமாக தலைவிரித்தாடுகின்றன. தேசியப் போராட்டம் உச்சக்கட்டத்துக்கு வர வேண்டிய நேரத்தில், ஒருவருக்கொருவரிடையே பொறாமை உணர்ச்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளிலும் தனிப்பட்ட தகராறுகளே இருக்கின்றன. பல்வேறு சங்கங்களிடையே மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போராட்டம் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது. பாவான் விஷநாகங்கள்(முஸ்லீம்களை இப்படிக் குறிப்பிடுகிறார்), ஒத்துழையாமை இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாடெங்கும் கலவரங்களைத் துவக்கி விஷயத்தைக் கக்கிப்படமெடுத்தாடி வருகின்றன." (ஆதாரம்: சி.பி.பிஷிகார் எழுதிய 'கேஷவ் சங்க் நிர்மதா' இந்தி நூல்-)

-ஹெட்கேவரின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் காந்தியாரை எதிர்க்கவும், முஸ்லீம்களை எதிர்க்கவும் பார்ப்பனர்களைப் பாதுகாக்கவுமே ஆர்.எஸ்.எஸ்.துவக்கப்பட்டது என்ற உண்மையை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

(1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து வகுப்புவாரி உரிமை கேட்டு தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்துகிறார். 1925ம் ஆண்டில் நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டம் நடப்பதாக ஹெட்கேவர் கூறுவதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்)

அது மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ்.அதிகாரபூர்வமாகவே, முஸ்லீம்களுக்கு எதிரானயுத்தத்தைப் பிரகடனப்படுத்துகிறது.

"நாட்டில் முஸ்லீம்கள் கலவரம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு கலவரத்தையும் முஸ்லீம்களே துவக்கி நடத்துகிறார்கள். அவர்களே குற்றவாளிகள்". -என்று கோல்வாக்கர்(இவர் ஹெட்கேவரின் வாரிசாக ஆர்.எஸ்.எஸ்.தலைவரானவர்) The Man and his mission நூலில் (பக்.24-25ல்) குறிப்பிடுகிறார். கலவரத்தை அவர் இந்து முஸ்லீம் கலவரம் என்று குறிப்பிடவில்லை. முஸ்லீம்கள் கலவரம் என்றே குறிப்பிடுகிறார்!

கோல்வாக்கர் பிரகடனம் இதோடு நின்றுவிடவில்லை. ஒளிவு மறைவு இல்லாமல் திட்டவட்டமாகவே அவர் கீழ்க்கண்டவாறு அறிவித்தனர்.

"பாரத தேசம் என்பது இந்துக்களின் தேசம். ராஷ்டிரம் என்பது இந்துக்களின் ராஷ்டிரமே. இந்த அரசியல் உண்மையை உணராமல் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடிப்புகளின் கற்பனையில் சிக்குவதற்கு டாக்டர் ஹெட்கேவர் தயாராக இல்லை. இது தான் உண்மை. உண்மையை வெளிப்படையாக சொல்கிறோம். இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிக்க முடியும். இந்துக்களின் சக்தி மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த உண்மையிலிருந்த - யாரையும் திசை திருப்பிவிட முடியாது. எனவே இந்து இளைஞர்கள் ஒன்று திரட்டப்படவேண்டும். வேறு வழியில்லை. ஆர்.எஸ்.எஸ்.துவக்கப்பட்டது இதற்குத்தான். அந்தப் புனித நாள் தான் 1925-விஜயதசமி நாள்." (குரு கோல்வாக்கர், மேற்குறிப்பிட்ட அதே நூலில் பக்கம் 25)

எனவே, முஸ்லீம்களுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டு அதையே, நோக்கமாகக் கொண்டு உருவானதுதான் ஆர்.எஸ்.எஸ்.என்பதற்கு அவர்களின் வாக்கு மூலங்களே சான்றுகளாகும்.

'நாங்கள் முஸ்லீம்களுக்கு விரோதிகள் அல்ல' என்று இவர்கள் நடத்தும் பிரச்சாரம், உண்மைக்கே தொடர்புடையது அல்ல.

25-9-1925ல் நாக்பூரில் ஹெட்கேவர் இல்லத்தில் 5-முக்கிய புள்ளிகள் கூடி ஆலோசனை செய்து திட்டம் ஒன்றை வகுத்தார்கள்.

இந்த "5 நபர்கள்" யார் யார் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.

இந்த 5 நபர்களின் பெயர்களை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெளியிடுவதே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வெளியீடுகள் எல்லாவற்றிலும் "அய்வர் குழு" என்று தான் குறிப்பிடுகிறார்களே தவிர, இதுவரை அந்த 'அய்வர்' யார்? என்பதை அவர்கள் வெளியிட்டதே இல்லை.

அந்த அய்வர் யார்?
1) டாக்டர் பி.எஸ்.மூஞ்சி
2) டாக்டர் எல்.வி.பாராஞ்சிபே
3) டாக்டர் கே.பி.ஹெட்கேவர்
4) டாக்டர் தோல்கார்
5) டாக்டர் பாபாராவ் சவர்க்கார்

இதுதான் ஹெட்கேவர் வீட்டில் ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அய்வர் குழு. இந்தப் பெயர்கள் ஆர்.எஸ்.எஸ். வெளியீட்டுகள் அனைத்திலும் மறைக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்ன?

வேறு ஒன்றுமில்லை. இவர்கள் காந்தியாரைக் கொலை செய்த இந்து மகாசபை என்ற அமைப்பின் தலைவர்கள். அனைவருமே மாராட்டிய பார்ப்பனர்கள்.

காந்தியார் கொலைக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று சாதித்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஆர்.எஸ்.எஸ்.அல்லவா?

ஆர்.எஸ்.எஸ் மூலகர்த்தாக்களே காந்தியாரை கொலை செய்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் என்ற உண்மை வெளியாகி விட்டால், அவர்கள் முகத்திரை கிழிந்துவிடும் அல்லவா? எனவேதான் இந்த இருட்டடிப்பு சூழ்ச்சி.


Thursday, January 06, 2005

எல்லாவற்றிலும் சமஸ்கிருதமயமாக்கல்

(தொடர்....9)

இப்படி எல்லாவற்றிலும் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கும் இந்த அமைப்பு பார்ப்பனீயத்தின் கலாச்சாரப் பாதுகாப்பு என்பது அல்லாமல் வேறு என்ன?

1999ம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக பா.ஜ.க.ஆட்சி அறிவித்ததன் காரணம் இதுதான்!

இவைகள் எல்லாவற்றையும் விட ஆர்.எஸ்.எஸ்.கொள்கைப் பிரகடனமே பார்ப்பனீய சமஸ்கிருத வெறியை தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களில் "விதிகளும் ஒழுங்கு முறைகளும்" என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"The aims and objects of Sangh are to weld together the diverse groups within Hindu Samaj and to revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit, that it may achieve an all sided development of the Bharathvarsha."

"இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேந்த்து அவர்களுக்கு எழுச்சி ஊட்டி இளமை ரத்தம் பாயச் செய்யவேண்டும். இந்து தார்மம், மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லா துறைகளிலும் வளர்ச்சிப் பெற முடியும். இதுதான் இந்த அமைப்பின் நோக்கமும் கொள்கையும் ஆகும்.

இவ்வாறு இந்து தர்மம், சமஸ்கிருத கலாச்சார அடிப்படையில் இந்துக்களை ஒன்று திரட்டுவதே தங்களின் லட்சியம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த பிறகும் இது ஒரு வகுப்புவாத அமைப்பு அல்ல என்று சாதித்தால் கடைசி மடையன் கூட அதை நம்புவதற்குத் தயாராக இருக்கமாட்டான்!

ஆர்.எஸ்.எஸ்.வலையில் சிக்கியுள்ள பரிதாபத்துக்குரிய பக்தித் தமிழர்களே!

இந்த அமைப்பு தமிழ் நாட்டுக்குத் தேவைதானா? இது தமிழனை வாழவைக்குமா? இந்த கொள்கைகளுக்கும் அமைப்பு முறைகளுக்கும் தமிழ் நாட்டோடு ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

தமிழ் நாட்டோடு தமிழனின் மொழியோடு, கலாச்சாரத்தோடு ஒட்டும் இல்லாத உறவும் இல்லாத இந்தக் கூட்டத்தின் கதை என்ன?

ஆரியக்கலாச்சாரத்தைப் பரப்பி பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் - இந்த அமைப்பின் வரலாறு என்ன?

அவைகளை விரிவாகப் பார்ப்போம்.

Monday, January 03, 2005

இடத்திற்கு ஏற்ற வேடம்

(தொடர்....8)

1939ம் ஆண்டுவரை பாடப்பட்டுவந்த இந்த வழிபாட்டு பாடல்களின் சுயரூபத்தைக் காட்டிக் கொடுத்து விட்ட காரணத்தால் பின்னர் அதை மாற்றி அமைத்துக் கொண்டார்கள் இந்த ஏமாற்றுக்காரர்கள்!

இடத்திற்கு ஏற்ற வேடம் ஊருக்கேற்ற கோலங்கள் காட்டுவதில் இவர்கள் மகாப் பெரிய சமர்த்தர்கள் அல்லவா!

1939ஆம் ஆண்டு வரை ஆரிய நாட்டை வணங்குகிறோம் என்று இந்தியிலும், மராத்தியிலும், பிரார்த்தனை செய்து வந்த இந்தக் கூட்டத்தினர் பிறகு இதை பார்ப்பனர்களின் "தெய்வீக மொழியான' சமஸ்கிருதத்தில் மாற்றி அமைத்துக் கொண்டார்கள்! தங்களின் சுயரூபத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய அந்தப் பாடல் வரிகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.சட்டதிட்டங்கள் அவர்களின் சமஸ்கிருத வெறித்தனத்தைப் பட்டாங்கமாகப் படம்பிடித்துக் காட்டிவிடுகிறது!

அவர்களின் சட்டதிட்டங்களில் 8-வது பிரிவில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் உள்ள பிரிவுகள் என்ன என்பது எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது! அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள்: இந்தியா முழுமைக்கும் அது எந்த மொழி பேசும் மாநிலமாக இருந்தாலும் அந்த அமைப்புகள் இந்த சமஸ்கிருத மொழியிலேதான் அழைக்கப்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களின் 8-வது விதியில் கூறப்பட்டிருக்கும் பிரிவுகளின் பெயர்கள் என்ன?

"பிராண்ட்' - மண்டலம்
"விபாக்" - மண்டலத்தில் ஒரு பகுதி
"பிராந்திய கேந்திரா" - மண்டலத் தலைமையகம்
"ஸில்லா" -மாவட்ட அமைப்பு
"ஷாகர்" - நகர அமைப்பு
"மண்டல்" - கிராம அமைப்பு

சட்டத்தின் 11வது பிரிவு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் உயர் அதிகாரக்குழு உறுப்பினர்கள், உயர் அமைப்புகள் பற்றி எடுத்துக் சொல்கிறது.

தலைவர்கள், பல்வேறு உயர் மட்டப் பிரிவுகளின் பெயர் பட்டியலை இதோ பாருங்கள்!

1. "சர் சங் சலாக்" (இவர்தான் அமைப்பின் தலைவர்)
2. "சர் கார்ய வஹா"
3. கேந்திரிய கார்ய காரி மண்டல்
4. அகில பாரதீய பிரதிநிதி சபா
5. பிராந்த், விபாக், ஸில்லா மற்றும் சங்சலக்குகள்
6. பிரச்சாரக்
7. பிராந்திய பிரதிநிதி சபா
ஆர்.எஸ்.எஸ்.ஸை துவக்கிய ஹெட்கேவருக்குப் பெயர்" அத்ய சர்சங்சலக். (ஆதாரம் விதி12)

14வது வீதியில் "கேந்திர கார்யகாரி மண்டல்" என்ற அமைப்பில் யார் யார் அங்கம் வகிப்பார்கள் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

அவைகள் இதோ:
1. சர் கார்ய வஹா
2. ஷா சர் கார்ய வஹா
3. அஹில் பாரதீய ஷிரிக் ஷிக்கான் பிராமுக்
4. அஹில் பாரதீய பவுதீய பவுதிக் ஷிக்கான் பிராமுக்
5. அஹல் பாரதீய பிரச்சார் பிராமுக்

உறுப்பினர்களுக்கு தரப்படும் பயிற்சிவகுப்புக்குப் பெயர் "அதிகாரி ஷிக்ஷன்வர்கா" இவர்கள் - நடத்தும் நிகழிச்சிகளுக்குப் பெயர் "வியாஸ் பூர்ணிமா" பொருளாளருக்குப் பெயர் நிதி பிரமுக் - தினசரி நடத்தும் பயிற்சிக்குப் பெயர் "ஷாக," சமஸ்கார்."

வாத்ய இசையை அமைத்துக் கொண்டு முன்னே போவதற்குப் பெயர் "கோஷ்"

அணிவகுப்பு ஊர்வலத்துக்குப் பெயர் "பாதஞ்சலன்"(சில ஆண்டுகட்கு முன்பு தமிழ் வருடப்பிறப்பு அன்று திருவல்லிக்கேணியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்த "பாரஞ்சலன்" நடத்த முயன்ற போதுதான் கைது செய்யப்பட்டனர்.)

பிறப்பிக்கின்ற கட்டளைக்குப் பெயர் "ஏக" "சப்பத" முதல் நகராக வருகின்றவர்களை அழைக்கின்ற பெயர் "அக்ரே சரோராக."

குழந்தைகள் மாநாட்டுக்குப் பெயர் "சிசு சங்கம்."

ஏன் இந்த அமைப்புக்கே பெயர் "ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க்."

தலையை சுற்றுகிறதா தோழர்களே! இந்தக் கூச்சல் தமிழகத்தில் கேட்கலாமா?

Sunday, January 02, 2005

'இந்து ராஷ்டிரம்' என்பது

(தொடர்....7)

"எனக்கு அநாமதேய கடிதங்கள் வருகின்றன. திலகர் வழியில் ஏன் செல்லவில்லை என்று அதிலே கேட்கிறார்கள். நான் சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய முறை திலகர் காட்டிய வழி முறை அல்ல. அதன் காரணமாகவே எனக்கு பல மாராட்டியத் தலைவர்களிடமிருந்து தொல்லைகள் வருகின்றன." (காந்தியார்- 'யாங் இந்தியா"-ஜுலை 13,1921)

-என்று மனம் குமுறி எழுதுகிறார்! ஒரு பார்ப்பனரல்லாத - மராட்டியரல்லாத காந்தியாரின்-அரசியல் செல்வாக்கை எதிர்த்த - அந்தக் காலத்திலே கொடி தூக்கிய பார்ப்பன - வகுப்பு வாத வெறிக்கும்பல் தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.கூட்டம்!

அவர்கள் கூறும் 'இந்து ராஷ்டிரம்' என்பது பார்ப்பன ராஷ்டிரம் தான் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்ட முடியும்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வேதநூல் என்று அவர்களால் போற்றப்படும் ஒரு நூலை ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்!

'இந்து ராஷ்டிரம்' என்றால் இது எப்படிப்பட்ட சமுக அமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு பழையகால நிகழ்ச்சி ஒன்றை பெருமையோடு எடுத்துக்காட்டி இதுதான் 'இந்து ராஷ்டிரம்' என்று மார்தட்டிக்கொள்கிறார்!

கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன? இதோ படியுங்கள்.

'தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது 'பிராமண' பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார் ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி 'நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே இது என்ன பிரச்னை?" என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம்! ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம்: ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னால் இது தான் இந்து தர்மம்' (குரு கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

இந்தக் கூட்டத்தின் வழிபாட்டுப் பாடல் என்ன தெரியுமா? அந்தப் பாடல்களின் வரிகள் இது.

"Salutation to you, O, Mother Land where I am born; Salutatious to you, O, Land of Aryas, Where I have grown; Salutations to you, O, Sacred land where I have worked"

"நான் பிறந்த தாய்நாடே உன்னை வணங்குகிறேன்.
என்னை வளர்த்த ஆரியநாடே, உன்னை வணங்குகிறேன்.
நான் உழைக்கும் புண்ணிய நாடே.. உன்னை வணங்குகிறேன்."

-இது தான் 1939ம் ஆண்டுவரை இந்தியிலும் மராத்தியிலும் இவர்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல்! (மராத்திய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தப்பாடல் இங்கே தமிழில் தரப்பட்டிருக்கிறது.)

"எங்களை ஆளாக்கிய ஆரிய நாடே" என்ற பிரார்த்தனைப் பாடிய இந்த மோசடிக் கூட்டங்கள் தான் அம்பேத்காருக்கு விழா எடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது!

அந்தப் பிரார்த்தனைப் பாடல்களை இன்னும் பாருங்கள்.

"நாங்கள் முழுமையான இந்துக்களாகும்
குணத்தை விரைந்து தாருங்கள்
உங்கள் கடவுளின் சக்தியை எங்களிடம் புகுத்துங்கள்
எங்களை ராமனின் சீடர்களாக்குங்கள்:
நாங்கள் நம்பிக்கையின் காவலர்களாவோம்:
சாம்ராத் ஸ்ரீ-ராமதாசுக்கு வெற்றி கிட்டட்டும்!
அவரே இந்த தேசத்தின் குரு:
இந்தியத்தாய் வெற்றி பெறட்டும்"

-என்பது தான் இந்தப்பாடலின் இறுதி வரிகள்!

இவர்கள் உத்தரவு கேட்கும் குரு ஸ்ரீ-சாம்ராத் ராமதாஸ் யார் தெரியுமா? அவர் ஒரு பார்ப்பனர்! சிவாஜி மன்னனின் குரு! தான் போராடிப் பெற்ற வெற்றிகளை இந்த பார்ப்பன குருவின் காலடியில்தான் காணிக்கையாக செலுத்துவான். சிவாஜி மன்னனாக இருந்தாலும் நாட்டை ஆண்டவர் - இந்த பார்ப்பனர்தான்! அந்த பார்ப்பனர்தான் இவர்கள். வசீகரித்துக்கொண்ட குரு! முஸ்லீம்களைப்போரிட்டு தோற்கடித்து விரட்டி - வெற்றிகளைப் பார்ப்பனர்களின் காலடியில் குவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

Saturday, January 01, 2005

காந்தியை தாக்கினார்கள்

(தொடர்....6)

ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய வரும் ஆர்.எஸ்.எஸ்.எதிர்ப்புக் காளத்திலே முன் வரிசையில் நின்றவருமான ராஜ்நாராயண் வெளியிட்டுள்ள ஒரு தகவல் இவர்களின் பார்ப்பன சுயரூபத்தை அம்பலமாக்குகிறது.

1979ம் ஆண்டு 25ம் தேதியிட்ட 'சண்டே' ஆங்கில வார இதழுக்கு ராஜ்நாராயண் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

'கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை நான் மிகவும் துல்லியமாகக் கவனித்து வருகிறேன். 1940-ஆம் ஆண்டில் இவர்கள் காந்தியைத் தாக்கினார்கள். 1942ஆகஸ்ட் 9ம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ்காரர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்களின் உளவாளிகளாகவே அவர்கள் செயல்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு கொள்கை உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் பேஷ்வா பிராமணர்களிடமிருந்து தான் ஆட்சியைப் பிடித்தனர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் போது ஆட்சி மீண்டும் பேஷ்வா பிராமணர்களிடமே திருப்பி தரப்பட வேண்டும் என்பது அவர்களின் கொள்கை.

ஆனால் பேஷ்வா பிராமணர்களின் ராஜ்யம் என்று சொன்னால் மக்கள் ஆதரவைப் பெற முடியாது. எனவே தான் அவர்கள் ஏற்கனவே ஒலித்து வந்த கோஷங்களை மாற்றிக் கொண்டு - பார்ப்பராஷ்டிரம் என்பதற்கு பதிலாக இந்து ராஷ்டிரம் என்று சொல்ல ஆரம்பித்தனர். "என்று உண்மையை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ராஜ்நாராயன்!

இந்து ராஷ்டிரம் என்று சொல்லப்படுவதன் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?

பிரிட்டிஷாரிடமிருந்து மீண்டும் மராட்டிய பார்ப்பனர்களின் கைக்கு ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மராட்டிய பார்ப்பனர்கள் இந்த இயக்கத்தில் முன்னணியில் நின்றார்கள்!

அகில இந்திய தலைவராக மராட்டியரல்லாத ஒரு பார்ப்பனரல்லாத சமுதாயத்தைச் சார்ந்த - காந்தியார் உருவாகி வந்ததை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால் இந்த விடுதலை இயக்கத்துக்கு ஒரு மாராட்டியப் பார்ப்பனரே தலைவராக இருக்க வேண்டும் என்பது இந்த சதிக் கூட்டத்தின் வெறித்தனமான கருத்தாக இருந்தது!

இந்து மகாசபையின் முன்னணித் தலைவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னோடியுமான டாக்டர். பி.எஸ். மூஞ்சி என்று மராட்டியப் பார்ப்பனர் காந்தியாருக்கு எதிரான சதியைத் துவக்கி நடத்த ஆரம்பித்தார். ஆர்.எஸ்.எஸ்.தலைவரான ஹெட்கேவர் என்ற பார்ப்பனர் இந்த மூஞ்சியின் நெருக்கமான சீடர்.

அநாமதேய மிரட்டல் கடிதங்களை எழுதும் அவர்களின் அற்பத்தனங்கள் இன்றைக்கு மட்டுமல்ல. அன்றைக்கே இருந்தது. அன்றைக்கு காந்தியாருக்கே அநாமதேய மிரட்டல் கடிதங்களை இந்த கூட்டம் எழுதியது. 'காந்தியே, பாலகங்காதர திலகரைப் போல் இந்துக்களை ஒன்று படுத்தி இந்து அடிப்படையில் சுயராஜ்யப் போராட்டத்துக்கு போராடாத நீ ஒரு கோழை' என்று காந்தியாருக்கே மிரட்டல் கடிதங்களை எழுதினார்கள்.

காந்தியார் மனம் குமுறிப்போய் 'யங் இந்தியா' பத்திரிக்கையில் இதற்கு பதில் எழுதுகிறார்.

"எனக்கு அநாமதேய கடிதங்கள் வருகின்றன. திலகர் வழியில் ஏன் செல்லவில்லை என்று அதிலே கேட்கிறார்கள். நான் சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய முறை திலகர் காட்டிய வழி முறை அல்ல. அதன் காரணமாகவே எனக்கு பல மாராட்டியத் தலைவர்களிடமிருந்து தொல்லைகள் வருகின்றன." (காந்தியார்- 'யாங் இந்தியா"-ஜுலை 13,1921)