Sunday, January 02, 2005

'இந்து ராஷ்டிரம்' என்பது

(தொடர்....7)

"எனக்கு அநாமதேய கடிதங்கள் வருகின்றன. திலகர் வழியில் ஏன் செல்லவில்லை என்று அதிலே கேட்கிறார்கள். நான் சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய முறை திலகர் காட்டிய வழி முறை அல்ல. அதன் காரணமாகவே எனக்கு பல மாராட்டியத் தலைவர்களிடமிருந்து தொல்லைகள் வருகின்றன." (காந்தியார்- 'யாங் இந்தியா"-ஜுலை 13,1921)

-என்று மனம் குமுறி எழுதுகிறார்! ஒரு பார்ப்பனரல்லாத - மராட்டியரல்லாத காந்தியாரின்-அரசியல் செல்வாக்கை எதிர்த்த - அந்தக் காலத்திலே கொடி தூக்கிய பார்ப்பன - வகுப்பு வாத வெறிக்கும்பல் தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.கூட்டம்!

அவர்கள் கூறும் 'இந்து ராஷ்டிரம்' என்பது பார்ப்பன ராஷ்டிரம் தான் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் சுட்டிக்காட்ட முடியும்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் வேதநூல் என்று அவர்களால் போற்றப்படும் ஒரு நூலை ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கோல்வாக்கர் எழுதியிருக்கிறார்!

'இந்து ராஷ்டிரம்' என்றால் இது எப்படிப்பட்ட சமுக அமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு பழையகால நிகழ்ச்சி ஒன்றை பெருமையோடு எடுத்துக்காட்டி இதுதான் 'இந்து ராஷ்டிரம்' என்று மார்தட்டிக்கொள்கிறார்!

கோல்வாக்கர் சொல்லும் இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன? இதோ படியுங்கள்.

'தென்னாட்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது 'பிராமண' பியூன் பின் தொடர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு சமுதாயத்துக்காரர் வந்தார் ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து கைகுலுக்கினார். ஆனால் பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி 'நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால் என்னுடைய பியூனின் காலைத்தொட்டு கும்பிடுகிறாயே இது என்ன பிரச்னை?" என்று கேட்கிறார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார். நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம்! ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் ஒரு பியூனாக இருக்கலாம்: ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை என்று பதில் சொன்னால் இது தான் இந்து தர்மம்' (குரு கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughts நூல் பக்கம் 138-139)

இந்தக் கூட்டத்தின் வழிபாட்டுப் பாடல் என்ன தெரியுமா? அந்தப் பாடல்களின் வரிகள் இது.

"Salutation to you, O, Mother Land where I am born; Salutatious to you, O, Land of Aryas, Where I have grown; Salutations to you, O, Sacred land where I have worked"

"நான் பிறந்த தாய்நாடே உன்னை வணங்குகிறேன்.
என்னை வளர்த்த ஆரியநாடே, உன்னை வணங்குகிறேன்.
நான் உழைக்கும் புண்ணிய நாடே.. உன்னை வணங்குகிறேன்."

-இது தான் 1939ம் ஆண்டுவரை இந்தியிலும் மராத்தியிலும் இவர்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல்! (மராத்திய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தப்பாடல் இங்கே தமிழில் தரப்பட்டிருக்கிறது.)

"எங்களை ஆளாக்கிய ஆரிய நாடே" என்ற பிரார்த்தனைப் பாடிய இந்த மோசடிக் கூட்டங்கள் தான் அம்பேத்காருக்கு விழா எடுக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது!

அந்தப் பிரார்த்தனைப் பாடல்களை இன்னும் பாருங்கள்.

"நாங்கள் முழுமையான இந்துக்களாகும்
குணத்தை விரைந்து தாருங்கள்
உங்கள் கடவுளின் சக்தியை எங்களிடம் புகுத்துங்கள்
எங்களை ராமனின் சீடர்களாக்குங்கள்:
நாங்கள் நம்பிக்கையின் காவலர்களாவோம்:
சாம்ராத் ஸ்ரீ-ராமதாசுக்கு வெற்றி கிட்டட்டும்!
அவரே இந்த தேசத்தின் குரு:
இந்தியத்தாய் வெற்றி பெறட்டும்"

-என்பது தான் இந்தப்பாடலின் இறுதி வரிகள்!

இவர்கள் உத்தரவு கேட்கும் குரு ஸ்ரீ-சாம்ராத் ராமதாஸ் யார் தெரியுமா? அவர் ஒரு பார்ப்பனர்! சிவாஜி மன்னனின் குரு! தான் போராடிப் பெற்ற வெற்றிகளை இந்த பார்ப்பன குருவின் காலடியில்தான் காணிக்கையாக செலுத்துவான். சிவாஜி மன்னனாக இருந்தாலும் நாட்டை ஆண்டவர் - இந்த பார்ப்பனர்தான்! அந்த பார்ப்பனர்தான் இவர்கள். வசீகரித்துக்கொண்ட குரு! முஸ்லீம்களைப்போரிட்டு தோற்கடித்து விரட்டி - வெற்றிகளைப் பார்ப்பனர்களின் காலடியில் குவிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

No comments: