Wednesday, January 19, 2005

மதவெறியர்

(தொடர் 13)

1889ம் ஆண்டு, ஏப்ரல் முதல் தேதி, நாக்பூரில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவருக்குப் பிறந்த மூன்றாவது மகன் தான் ஹெட்கேவர்! தலைமுறையாக அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது இந்தக் குடும்பம் என்பதிலிருந்தே பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித்தனத்தின் சூழலில் அவர் வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெளிவாகவே விளங்கும். அதற்கு பல தலைமுறைகளுக்கு முன்பே ஆந்திர மாநிலத்தில் 'குந்த்குர்த்தி' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த அய்தராபாத் நிசாம் மன்னர்களின் ஆட்சியிணை எதிர்த்துப் போராட முடியாமல், வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்த குடும்பமாகும்!

எனவே, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறி, முஸ்லீம்களின் எதிர்ப்பு என்ற உணர்வுள்ள குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர் ஹெட்கேவர்.

1902ம் ஆண்டில், ஹெட்கேவரின் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவரது சகோதரர் மகாதேவ சாஸ்திரி செய்து வந்த தொழிலும் பார்ப்பனப் புரோகிதத் தொழில்தான்!

'மூஞ்சி' ஆர்.எஸ்.எஸ்.சைத் தோற்றுவித்த அய்வர் குழுவில் ஒருவர். இந்து ராஷ்டிரத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான துடிப்பு கொண்டிருந்தவர் இந்த மூஞ்சி!

ஹெட்கேவருக்கு நல்ல உடல் வலிவு உண்டு. குத்துச்சண்டை, நீச்சல் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருச்சண்டைகளில் அவர் வீரராகத் திகழ்ந்தார். எனவே, அக்கால் அரசியலுக்கு இவர் சரியானவர் என்ற முடிவுக்கு வந்து, அவரை உற்சாகப்படுத்தினார் இந்த 'மூஞ்சி'.

ஆர்.எஸ்.எஸ்.ஒரு வன்முறைக் கும்பலாகவும் பார்ப்பன வெறி அமைப்பாகவும், முஸ்லீம்கள் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் கல்லில் செதுக்கப்பட்ட உண்மைகளே என்பதற்கு ஹெட்கேவர் வளர்ந்த, உருவான சூழ்நிலைகளே சரியான சான்றுகளாகும்.

"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?"

"அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."


ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்திலே, இளைஞன் ஒருவன் கேட்ட கேள்விக்கு ஹெட்கேவர் மேற்கொண்ட பதிலை அளித்தார்!

அவரைப் பொறுத்தவரை, தன்னுடைய 'ஆளுமை சக்தியால்' தொண்டர்களைக் கட்டாயப்படுத்தி தனது அமைப்புக்கு இழுத்தவரே தவிர நியாயப்பூர்வமான அறிவு வாதங்களை எடுத்து வைத்து விவாதித்து அதன் மூலம் தனது அமைப்புக்கு பலம் சேர்ந்தவர் அல்ல!

இந்து ராஷ்டிரம் என்பது என்ன என்ற கேள்விக்கு, விவாதபூர்வமான விளக்கங்கள் எதையும் தராமல், தன்னையே முன்னிலைப்படுத்தி, நிலைமையை சமாளித்தார் ஹெட்கேவர்!

(இந்த உரையாடலை, ஹெட்கேவரின் வாரிசு கோல்வாக்கர் எழுதிய 'ஸ்ரீ குருஜி சம்ஹாரதர்சன்' என்ற இந்தி நூலில் 5-வது அத்தியாயத்தில் 22-23 பக்கங்களில் குறிப்பிடுகிறார்)

தொடர்ந்து கோல்வாக்கர் அதே நூலில் மேலும் எழுதுகிறார்!

"நான் தான் அந்த முட்டாள் என்ற ஒரு வார்த்தைக்கு மேல், அவர் பேசவில்லை. எந்த வாதத்தையும் வைக்கவில்லை. கேட்டவரை சமாதானப்படுத்திடும் நியாயங்களையும் சொல்லவில்லை. அதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால் அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னவுடனேயே, அங்கு கூடியிருந்த எல்லா உறுப்பினர்களும் சமாதானமடைந்து, தாங்கள் 'சுயம் சேவக்காக, உறுதி எடுக்க முன்வந்தனர்."

நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"

No comments: