(தொடர் 12)
இந்து மகாசபைக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. இரண்டும் ஒரே அமைப்புகளாகவே ஒன்றுபட்டு நின்றிருக்கின்றன. ஆனால் இதைச் சொல்வதற்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெட்கப்படுகிறார்கள். காந்தியாரைக் கொன்ற அதே கூட்டம் தான் என்ற உண்மை அனலாக கொதித்து தங்களை சுட்டெரித்துவிடும் என்ற அச்சத்தால்தான். இந்தப் பெயர் இருட்டடிப்பை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றார்கள்! ஆனாலும் அவர்களையும் அறியாமல் உண்மைகள் வெளிவந்து விட்டன.
அய்வர் குழு ஆலோசனைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். முதல் கூட்டம் எங்கு நடந்தது? அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் யார்? எந்தச் சூழ்நிலையில் உருவானது? இதுபற்றி பால்க்கார் என்ற ஆராய்ச்சியாளர், தனது ஆய்வுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
'அவர்களின் முதல் கூட்டம் நாக்பூர் நகரத்தில், பார்ப்பனர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியான 'மொகைத்வாதே'(Mohite Wade) என்ற இடத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் எந்த ஜாதிக்காரர்கள் என்ற எண்ணிக்கையை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வைத்திருக்கவில்லை என்றாலும், நான் பார்த்த ஆவணங்களிலிருந்து ஒன்றை உறுதியாகச் சொல்லமுடியும். அப்போது இந்த அமைப்பில் இருந்த உறுப்பினர்கள் எல்லாம் பார்ப்பனர்களே" என்று எழுதுகிறார்.
இந்த அமைப்பு தோன்றுவதற்காக, அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றையும் பால்க்கார் சுட்டிக்காட்டுகிறார்.
"நாக்பூர் பகுதி போன்ஸ்ஸி என்ற அரச வம்ச ஆட்சிக்கு கீழே இருந்து வந்தது. அந்த அரசர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கப்பட்டனர் அவர்களின் பரம்பரைத் தொழிலிலே ஈடுபட்டு வந்தனர். மூன்றாவது ராகுஜி மன்னன் அப்போது அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு வாரிசு இல்லாததால், பிரிட்டிஷார் தங்களிடமிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பிரிட்டிஷாரின் நேரடியான ஆட்சிக்குக்கீழ் அந்தப் பகுதியைக் கொண்டு வந்து விட்டனர். இந்த ஆட்சி மாற்றத்தைக் கண்டு பார்ப்பனர்கள் அஞ்சினர்! தங்களுக்கு இருந்த உயர்ந்த இடம் பறிபோய்விடுமோ என்ற பதைத்தனர். அப்போது உடன்கட்டை ஏறுதல் ஒழிப்புச் சட்டம், விதவைகள் மறுமணச் சட்டம் ஆகிய இந்துச் சட்டத்திருத்தங்கள் வந்திருந்தன. இவைகளைக் கண்டு பார்ப்பனர்கள் பதறி, இந்து தர்மமே அழியப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது நாக்பூரில் உள்ள ஐகருத்ரேஷ்வர் கோயில் சுவரில் ஒரு வாசகம் ஒட்டப்பட்டது அதில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
நாக்பூரில் வாழும் எல்லா பிராமண புரோகிதர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு! சாஸ்திரிகளானாலும், பண்டிட்களானாலும், அர்ச்சகர்களானாலும் நான்கு வேதங்களின் யஜ்னிக்குகளாக இருந்தாலும் அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பவராக இருந்தாலும் எல்லா பிராமணர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறோம். இப்போது மிகப்பெரிய பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்து அரசு இருக்குமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது எனவே, நாம் குறிப்பிட்ட நாளில், நமக்கு வந்துள்ள பேராபத்தைத் தடுக்க ஜகருத்ரேஷ்வர் கோயிலில், எல்லா நாக்பூர் பிராமணர்களும் திரள வேண்டும். பகவானுக்கும் ருத்ராபிஷேகம் செய்து மந்திரங்கள் ஓதி, சடங்குகளை நடத்தவேண்டும். இதை எந்த பிராமணராவது செய்யத் தவறினால், அவர்கள் பிராமணர்களே அல்ல என்று அறிவிக்கப்படும்."
இவ்வாறு பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்ததை அவர்கள் பறைச்சாற்றினார்கள் என்று பால்க்கார் குறிப்பிடுகிறார்.
இந்தச் சூழ்நிலையில் தான் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.உதயமானது.
இந்த உண்மைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் முதல் தலைவர், 'சர் சங்சாலக்' என்று ஏற்றிப்போற்றப்படும் அந்த கேஷவ பல்ராம் ஹெட்கேவர் யார் என்ற விவரங்களை ஆராய்வோம்.
நன்றி:
விடுதலை இராசேந்திரன் அவர்களின் "ஆர்.எஸ்.எஸ் - ஓர் அபாயம்"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment