Thursday, January 06, 2005

எல்லாவற்றிலும் சமஸ்கிருதமயமாக்கல்

(தொடர்....9)

இப்படி எல்லாவற்றிலும் சமஸ்கிருதமயமாகிக் கிடக்கும் இந்த அமைப்பு பார்ப்பனீயத்தின் கலாச்சாரப் பாதுகாப்பு என்பது அல்லாமல் வேறு என்ன?

1999ம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக பா.ஜ.க.ஆட்சி அறிவித்ததன் காரணம் இதுதான்!

இவைகள் எல்லாவற்றையும் விட ஆர்.எஸ்.எஸ்.கொள்கைப் பிரகடனமே பார்ப்பனீய சமஸ்கிருத வெறியை தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். சட்ட திட்டங்களில் "விதிகளும் ஒழுங்கு முறைகளும்" என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"The aims and objects of Sangh are to weld together the diverse groups within Hindu Samaj and to revitalise and rejuvenate the same on the basis of its Dharma and Sanskrit, that it may achieve an all sided development of the Bharathvarsha."

"இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்று சேந்த்து அவர்களுக்கு எழுச்சி ஊட்டி இளமை ரத்தம் பாயச் செய்யவேண்டும். இந்து தார்மம், மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும். இதன் மூலம் பாரதத்தின் எல்லா துறைகளிலும் வளர்ச்சிப் பெற முடியும். இதுதான் இந்த அமைப்பின் நோக்கமும் கொள்கையும் ஆகும்.

இவ்வாறு இந்து தர்மம், சமஸ்கிருத கலாச்சார அடிப்படையில் இந்துக்களை ஒன்று திரட்டுவதே தங்களின் லட்சியம் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்த பிறகும் இது ஒரு வகுப்புவாத அமைப்பு அல்ல என்று சாதித்தால் கடைசி மடையன் கூட அதை நம்புவதற்குத் தயாராக இருக்கமாட்டான்!

ஆர்.எஸ்.எஸ்.வலையில் சிக்கியுள்ள பரிதாபத்துக்குரிய பக்தித் தமிழர்களே!

இந்த அமைப்பு தமிழ் நாட்டுக்குத் தேவைதானா? இது தமிழனை வாழவைக்குமா? இந்த கொள்கைகளுக்கும் அமைப்பு முறைகளுக்கும் தமிழ் நாட்டோடு ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

தமிழ் நாட்டோடு தமிழனின் மொழியோடு, கலாச்சாரத்தோடு ஒட்டும் இல்லாத உறவும் இல்லாத இந்தக் கூட்டத்தின் கதை என்ன?

ஆரியக்கலாச்சாரத்தைப் பரப்பி பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் - இந்த அமைப்பின் வரலாறு என்ன?

அவைகளை விரிவாகப் பார்ப்போம்.

No comments: